இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, ஃபிஜி நாட்டின் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார் அந்நாட்டு அதிபர் வில்லியம் மைவலிலி.
ஒரு நாள் அரசு முறைப்பயணமாக இன்று (ஆகஸ்ட் 6) ஃபிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. முர்முவை வரவேற்றார் அந்நாட்டு அதிபர் ரத்து வில்லியம் மைவலிலி. இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இந்தியா - ஃபிஜி உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைநகர் சுவாவில் ஆலோசனை நடத்தினார்கள்.
ஃபிஜி தலைநகர் சுவாவில் உள்ள விமான நிலையத்தில் இன்று காலை தறையிறங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. சுவா விமான நிலையத்தில் முர்முவை நேரடியாக வரவேற்றார் அந்நாட்டுப் பிரதமர் சிட்வேனி ரபூகா.
இதைத் தொடர்ந்து சுவாவில் உள்ள அதிபர் மாளிகையில் திரௌபதி முர்முவுக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஃபிஜி நாட்டின் உயரிய விருதான `ஆர்டர் ஆஃப் ஃபிஜி’ விருதை திரௌபதி முர்முவுக்கு வழங்கிக் கௌரவித்தார் அதிபர் வில்லியம் மைவலிலி.
ஃபிஜியைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7 முதல் 9 வரை நியூசிலாந்துக்கும், ஆகஸ்ட் 10-ல் திமோர் லெஸ்தி நாட்டுக்கும் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
`ஃபிஜி, நியூசிலாந்து, திமோர் லெஸ்தி என இந்த 3 நாடுகளுக்கும் குடியரசுத் தலைவர் மேற்கொள்ளும் அரசுமுறை சுற்றுப்பயணம் கடந்த 2014-ல் பிரதமர் மோடி வெளியிட்ட இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் வெளிப்பாடு’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.