ANI
உலகம்

போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராக உள்ளது: வாடிகன்

அவரது மூச்சுக் குழாயில் நோய்த் தொற்று தீவிரமடைந்து, இரு நுரையீரல்களும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

இருமல், வாந்தி மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளதாக வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க பிரிவின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் சுவாசப் பிரச்னை காரணமாக கடந்த பிப்.14-ல் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூச்சுக் குழாயில் நோய்த் தொற்று தீவிரமடைந்து, இரு நுரையீரல்களும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக கடந்த பிப்.22-ல் செய்தி வெளியானது. ஆனால் அதன்பிறகு, ஒரு நாள் கழித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேற்கொண்டு அவருக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனக்காக பிராத்தனை மேற்கொள்ளுமாறு போப் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், போப் உடல்நிலை குறித்து நேற்று (பிப்.28) வாடிகன் வெளியிட்ட அறிக்கையில்,

`மூச்சுக்குழாய் பிடிப்பு (bronchospasm) பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை நண்பகல் தொடர்ச்சியாக வாந்தியால் பாதிக்கப்பட்டார் போப். அவரது சுவாச நிலை திடீரென மோசமடைந்தது. உடனடியாக அவரது சுவாசப்பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு மேம்படுத்தப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, போப் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக இன்று (மார்ச் 1) செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது வாடிகன்.

அர்ஜென்டினாவைப் பூர்வீகமாகக் கொண்ட போப் பிரான்சிஸ், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தும் முதல் லத்தீன் அமெரிக்கர் ஆவார். மேலும், போப் பதவியை வகிக்கும் முதல் ஜெஸ்யூட் என்கிற பெருமையும் போப் பிரான்சிஸ் வசம் உள்ளது.