காஸா போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப்பின் விரிவான திட்டத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
சமீபத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்தார். அப்போது போர் நிறுத்தத்திற்காக 20 குறிப்புகள் கொண்ட விரிவான திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார். அதில் பயங்கரவாதம் அற்ற மண்டலமாக காஸா மாறும், மக்களின் நலனுக்காக காஸா மறுவடிவமைப்பு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
இதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஹமாஸ் தரப்பும் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் பாலஸ்தீன பிணை கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் போர் நிறுத்தத் திட்டத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில்,
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள காஸா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் விரிவான திட்டத்தை வரவேற்கிறோம். இது பாலஸ்தீனம் - இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமன்றி பரந்த மேற்கு ஆசியப் பகுதி முழுவதுக்குமான நீண்டகால, நிலையான அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கான சாத்தியமான பாதையாகத் திகழ்கிறது. இதற்குத் தொடர்புள்ள அனைத்து தரப்பினரும், அதிபர் டிரம்பின் முன்னெடுப்புக்குப் பின்னால் ஒற்றுமையாக ஆதரவு கொடுத்து, போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியைப் பாதுகாக்க முன்வருவார்கள் என நம்புகிறோம்”
என்று கூறியுள்ளார்.