ANI
உலகம்

பிரிக்ஸ் உச்சி மாநாடு: ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி!

குறிப்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் வரும் அக்.22-ல் அரசு முறைப் பயணமாக ரஷ்யாவுக்குச் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

உலக அரங்கில் அதிவேக வளர்ச்சியை எட்டிய மேற்குலகைச் சாராத நாடுகளான பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு 2009-ல் உருவானது பிரிக்ஸ் அமைப்பு. 2010-ல் இந்த அமைப்பில் தென்னாப்பிரிக்கா இணைந்தது. வருடத்துக்கு ஒரு முறை இந்த அமைப்பின் உச்சி மாநாடு இதன் உறுப்பு நாடுகளில் சுழற்சி முறையில் நடக்கும்.

அதன்படி நடப்பாண்டின் பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவின் காஸென் நகரில் வரும் அக்.22 தொடங்கி 24 வரை நடைபெறவுள்ளது. அக்.22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிய விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோஸா மற்றும் பிரேஸில் அதிபர் லுலா டா சில்வா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டுக்கு இடையே இந்த தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் பிரதமர் மோடி.

மிகவும் குறிப்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நடைபெறும் வர்த்தகத்தில் அமெரிக்க டாலரைத் தவிர்த்துவிட்டு அந்தந்த நாடுகளின் பணத்தில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வகையில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பான முக்கிய முடிவு இந்த உச்சி மாநாட்டின்போது எடுக்கப்படும் எனத் தெரிகிறது.