ANI
உலகம்

உக்ரைன் அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி!

போரால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ரஷ்யா ஈடுகட்டும்வரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை முடக்க ஜி-7 தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராம் அப்பண்ணசாமி

ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து பேசியுள்ளார்.

இத்தாலியின் அப்பூலியா பகுதியில் ஜூன் 13-ல் தொடங்கி ஜி-7 உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகத் தலைவர்கள் பலரும் இத்தாலியில் குழுமியுள்ளனர்.

இந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, `அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து உரையாடினேன். உக்ரைனுடனான உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையை (ரஷ்யா-உக்ரைன் போர்) பேச்சுவார்த்தை வழியாக முடிவுக்குக் கொண்டு வர முடியும் என இந்தியா நம்புகிறது’ எனத் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

ஜெலென்ஸ்கியைச் சந்திக்கும் முன்பு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார் மோடி. ஜி-7 அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றாலும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அழைப்பு காரணமாக ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சிறப்பு விருந்தினராக இத்தாலி சென்றுள்ளார் மோடி.

ரஷ்யா-உக்ரைன் போரால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்புகளை ரஷ்யா ஈடுகட்டும்வரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை முடக்க ஜி-7 தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்குக் கடன் வழங்கவும் இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜி-7 கூட்டமைப்பில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.