மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் குறித்து குவைத் இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளின் எரிசக்தி உற்பத்தி குறைந்திருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யும் நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கிய பகுதியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையையும் ஈரான் தாக்கியுள்ளது. இச்சம்பவம் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், குவைத் இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆலோசனை
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
நேற்று, நமது பிரதமர் குவைத் இளவரசர் அல் கலீத் அல் ஷபாவுடன் பேசினார். இரு தலைவர்களும் மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். பிரதமர், குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான, சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது நமக்கு முதன்மையான முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தினார். பிராந்திய அமைதியும் ஸ்திரத்தன்மையும் தொடர்ச்சியான ராஜதந்திர ஈடுபாடு மூலமே சாத்தியம் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். குவைத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்ததற்காக பிரதமர் இளவரசருக்கு நன்றி தெரிவித்தார். அந்த நாட்டில் பெரிய அளவிலான இந்திய புலம்பெயர்ந்தோர் உள்ளனர். வரவிருக்கும் ஈத் பண்டிகைக்கான வாழ்த்துக்களையும் பிரதமர் இளவரசருக்கு தெரிவித்தார்.
பாகிஸ்தான் தாக்குதலுக்குக் கண்டனம்
கடந்த சில நாள்களாக, பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதையும் இந்தியா கண்டித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட இந்த கொடூரமான வான் தாக்குதல்களை மீண்டும் கடுமையாக கண்டிக்கிறோம்.
அண்டை நாடுகளுக்கு உதவும் இந்தியா
எரிசக்தி தொடர்பாக, நமது பல அண்டை நாடுகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு மற்றும் வேறு சில அண்டை நாடுகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. முன்பு குறிப்பிட்டபடி, 2007 முதல் இந்தியா பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் வங்கதேசத்திற்கு டீசல் வழங்கி வருகிறது. நமது சொந்த தேவை, சுத்திகரிப்பு திறன் மற்றும் டீசல் கிடைக்கும் தன்மையை கருத்தில் கொண்டு, வங்கதேசத்திற்கும் மற்ற அண்டை நாடுகளுக்கும் தற்போதும் உதவி செய்து வருகிறோம்.
உலக நாடுகளுக்குச் சோதனைக் காலம்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் நெருக்கடி நிலைமையில் நாம் எங்கு நிற்கிறோம், நமது நிலைப்பாடு என்ன, அதை எப்படி பார்க்கிறோம் என்பது குறித்து பல அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். பதற்றத்தைக் குறைப்பது, பேச்சுவர்த்தை உள்ளிட்ட ராஜதந்திர முறைகள் மூலம் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் அழைப்பு விடுத்துள்ளோம். இது நமக்கு மட்டுமின்றி, உலக அளவில் சோதனைக்குரிய காலமாக உள்ளது. மற்ற நாட்டுத் தலைவர்களுடன் நமது தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். சில நாள்களுக்கு முன், நமது ஈடுபாட்டால், ஹார்முஸ் நீரிணை வழியாக நமது இரண்டு எரிவாயு தாங்கிக் கப்பல்களை இந்தியாவுக்கு வந்தன. நமது எரிசக்தி பாதுகாப்பு தேவைகளை உறுதி செய்வதிலும், அதே நேரத்தில் வளைகுடா நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் உள்ள நமது இந்திய குடிமக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதிலும் நாங்கள் கவனமாக உள்ளோம்” என்றார்.
External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said that Prime Minister Modi held discussions with the Crown Prince of Kuwait regarding the prevailing war situation in the Middle East.