மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு ANI
உலகம்

இந்தியாவுக்கு வாங்க: சீன அதிபருக்குப் பிரதமர் மோடி அழைப்பு | Modi | Xi Jinping |

2026-ல் இந்தியாவில் நடைபெறும் ப்ரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்குப் பிரதர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு அரசுமுறைப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார் பிரதமர் மோடி. சீனாவில் இன்று தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி பங்கேற்றார். எல்லை மோதலுக்குப் பிறகு முதல்முறையாக அவர் சீனாவுக்குச் சென்றுள்ளார்.

இன்று, பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு தியான்ஜின்னில் நடைபெற்றது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு முன்பு, 2024-ல் ரஷ்யாவில் நடைபெற்ற ப்ரிக்ஸ் உச்சிமாநாட்டில் இருவரும் சந்தித்தார்கள். எல்லைப் பகுதிகளில் அமைதியும் சாந்தமும் நிலவுவது இருநாட்டு உறவுகள் முன்னேறுவதற்கு அவசியம் என இன்றைய சந்திப்பில் மோடி வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற விலகல் (disengagement) நடவடிக்கைகளுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் அமைதி நிலவுவதில் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தார்கள். எல்லைப் பிரச்னை குறித்து நியாயமான, இருதரப்பும் ஏற்கக்கூடிய தீர்வை நோக்கி இரு நாடுகளும் செல்லவேண்டும் என இரு தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா – சீனா உறவுகள் மற்றொரு நாட்டின் பார்வையில் பார்க்கப்படக் கூடாது என்றும் தீவிரவாதம், நியாயமான வர்த்தகம் போன்ற பிரச்னைகளில் இருநாடுகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ், எல்லைப் பிரச்னை காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்தியா - சீனா இடையிலான நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படும், இரு நாட்டுப் பத்திரிகையாளர்களும் சீனா, இந்தியாவுக்குத் தொழில் ரீதியாகப் பயணம் மேற்கொண்டு செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் என்று மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம், இந்தியாவுக்கு வந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் 12 உடன்படிக்கைகளில் கையெழுத்திடப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாகவே சீனாவுக்குச் சென்றுள்ளார் பிரதமர் மோடி.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் 2020 முதல் இரு நாடுகளுக்கு இடையில் எல்லை வழி வர்த்தம் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்கும் என்றும் சீனா அறிவித்திருந்தது. சீனாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளால் இந்தியத் தொழில்துறை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இந்தியாவுக்கு உரங்கள், தாதுக்கள், சுரங்ப்பாதை துளையிடும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்ய சமீபத்தில் சீனா ஒப்புதல் அளித்தது.

மேலும், 2026-ல் இந்தியாவில் நடைபெறும் ப்ரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்குப் பிரதர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தற்போது ப்ரிக்ஸ் அமைப்பில் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோபியா, இந்தோனேசியா மற்றும் ஈரான் என 11 நாடுகள் உள்ளன.