மோடி, இஷிபா https://x.com/narendramodi
உலகம்

ஜப்பானிய தொழில்நுட்பமும், இந்திய திறமையும் வெற்றிக்கான கூட்டணி: பிரதமர் மோடி | PM Modi | Japan

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 10 டிரில்லியன் யென் அளவுக்கான ஜப்பானிய முதலீட்டை இலக்காகக் கொண்டு இரு தரப்பினரும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

ராம் அப்பண்ணசாமி

இந்தியாவும், ஜப்பானும் தங்களது சிறப்பான கூட்டணியின் மூலம் ஒரு `புதிய மற்றும் பொற்கால அத்தியாயத்திற்கு’ அடித்தளமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 29) பேசியுள்ளார். தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான 10 ஆண்டுகால ஒத்துழைப்பிற்கான வரைபடத்தை வெளியிட்டனர்.

அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தினார். மேலும், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து ஜப்பானிய பிரதமருடன் கூட்டாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, ஜப்பானிய தொழில்நுட்பமும் இந்திய திறமையும் வெற்றிக்கான ஒரு கூட்டணி என்ற கருத்தை வலியுறுத்தினார், புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் பலத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

`சிறந்த உலகத்தை வடிவமைப்பதில் வலுவான ஜனநாயக நாடுகள் இயற்கையான பங்காளிகளாக உள்ளன... எங்கள் தொலைநோக்குப் பார்வையின் மையத்தில் முதலீடு, புத்தாக்கம், பொருளாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், சுகாதாரம், போக்குவரத்து, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் மாநில-மாகாண கூட்டணிகள் ஆகியவை உள்ளன,’ என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்திய பொருள்கள் மீது 50% சுங்க வரியை விதித்துள்ள அமெரிக்காவுடன் அரசுரீதியான உறவில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஜப்பான் போன்ற பாரம்பரிய நட்பு நாடுகளுடனான உறவை ஆழப்படுத்தவும், முதலீடுகளை அதிகரிக்கவும் இந்தியா முயற்சி செய்து வரும் நிலையில், இத்தகைய கருத்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 10 டிரில்லியன் யென் அளவுக்கான ஜப்பானிய முதலீட்டை இலக்காகக் கொண்டு இரு தரப்பினரும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.