உலகம்

இலங்கையின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவிப்பு!

பாதுகாப்பு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, சுகாதாரம், வணிகம், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்களில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

ராம் அப்பண்ணசாமி

நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயரிய மித்ர விபூஷணா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கௌரவித்தார்.

தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்ச மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாங்காக் நகரில் இருந்து கிளம்பி நேரடியாக இலங்கையைச் சென்றடைந்தார்.

அரசு முறை சுற்றுப் பயணமாக அந்நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்குத் தலைநகர் கொழும்புவில் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு முதல் முறையாக அந்நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளதால், இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை, எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, சுகாதாரம், வணிகம், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்களில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். அதன்பிறகு, நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயரிய மித்ர விபூஷணா விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அதிபர் திசாநாயக்க கௌரவித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி கூறியதாவது, `தீவிரவாதத் தாக்குதல், கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்னைகளால் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றது. இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையேயான உறவு நல்ல நிலையில் உள்ளது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.