உலகம்

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!

இந்திய வம்சாவளி மக்கள் பங்கேற்ற `ஹாலா மோடி’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி.

ராம் அப்பண்ணசாமி

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக குவைத் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

குவைத் பிரதமர் அஹ்மத் அல் அப்துல்லா அல் சபாஹ் விடுத்த அழைப்பை ஏற்று, 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று (டிச.22) தலைநகர் தில்லியில் இருந்து கிளம்பி குவைத்தைச் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நாட்டுத் தலைநகரான குவைத் நகரில் உள்ள விமான நிலையத்தில், இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது 101 வயதாகும் முன்னாள் இந்திய வெளியுறவு அதிகாரி மங்கள் சைன் ஹந்தாவைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. அதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளி மக்கள் பங்கேற்ற `ஹாலா மோடி’ கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

இந்நிலையில், குவைத் அரசு சார்பில் இன்று காலை பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமத் அல் ஜபெர் அல் சபாஹ் உடனிருந்தார். இதனை அடுத்து அந்நாட்டின் மிக உயரிய ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த 1981-ல் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அரசுமுறைப் பயணமாக குவைத்திற்குச் சென்றார். அதனைத் தொடர்ந்து 43 வருடங்களுக்குப் பிறகு குவைத்துக்குச் சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமை பிரதமர் மோடிக்குக் கிடைத்துள்ளது.