பிரதமர் மோடி 
உலகம்

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு: ஏழு வருடங்கள் கழித்து சீனாவில் பிரதமர் மோடி! | SCO | PM Modi

2020-ல் ஏற்பட்ட கால்வான் மோதல்களுக்குப் பிறகு சீனாவிற்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

ராம் அப்பண்ணசாமி

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் சீனாவின் தியான்ஜின் நகரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 30) சென்றடைந்தார்.

நாளை (ஆக. 31) மற்றும் செப்டம்பர் 1-ல் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

இந்தியா-சீனா உறவுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழலை கருத்தில்கொண்டு, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான அவரது இருதரப்பு பேச்சுவார்த்தை உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

இந்திய இறக்குமதிகள் மீது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிகப்படியான வரிகளை விதித்ததது. இதனால் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலின் தொடர்ச்சியாக நடைபெறுவதால், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கடைசியாக கடந்த 2018-ல் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சீனாவுக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து 2020-ல் லடாக் யூனியன் பிரதேசத்தின் கால்வானில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு சீனாவிற்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

கடந்த 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கஸன் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.