ANI
உலகம்

கனடா துணை பிரதமர் ராஜினாமா: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி!

இந்த அறிவிப்பை டிரம்ப் நடைமுறைப்படுத்தினால், கனடா பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

ராம் அப்பண்ணசாமி

கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலேண்ட் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவரது லிபரல் கட்சியில் நெருக்கடி முற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிரமான எல்லைக் கட்டுப்பாட்டுகளை பின்பற்றாவிட்டாலும், எல்லைப் பகுதிகள் வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தவில்லை என்றாலும் கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரிகள் விதிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்.

கனடாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் 70 சதவீதத்திற்கும் மேலானவை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றன. வரும் ஜனவரியில் அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப், இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தினால் கனடா பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

இந்நிலையில், கனடா துணை பிரதமரும் அந்நாட்டு நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலேண்ட் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கனடாவின் எதிர்காலம் தொடர்பாக பிரதமர் ட்ரூடோவுக்கும், தனக்கும் எழுந்த பல்வேறு முரண்பாடுகள் காரணமாக, பதவியை தாம் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் கிறிஸ்டியா. நேற்று கனடா வீட்டுவசதி அமைச்சர் சியன் ஃப்ரேசர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள கனடாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் டிரம்பின் எச்சரிக்கையால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கத் தவறிய பிரதமர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடா லிபரல் கட்சியின் தலைவராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து இரு அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, கட்சியில் அவருக்கான நெருக்கடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.