தீ விபத்துக்குள்ளான கப்பல் 
உலகம்

இந்தோனேஷியாவில் நடுக்கப்பலில் சொகுசு கப்பலில் தீ விபத்து: கடலில் குதித்த பயணிகள் | Fire Accident

தீ விபத்து ஏற்பட்டபோது சொகுசு கப்பலில் 280 பயணிகள் இருந்துள்ளனர்.

ராம் அப்பண்ணசாமி

இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் அமைந்துள்ள தலிசே தீவு அருகே நடுக்கடலில் இருந்த கே.எம். பார்சிலோனா வி.ஏ. என்கிற பயணிகள் சொகுசு கப்பல் இன்று (ஜூலை 20) பிற்பகலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கப்பலில் இருந்து வெளியேறிய தீப்பிழம்புகளிலிருந்து தப்பிக்கவேண்டி பயணிகள் பலர் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்தபடி கடலில் குதிப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கப்பலில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறுவதும், மக்கள் கூச்சலிடுவதையும் அவற்றில் காண முடிகிறது.

தீ விபத்து ஏற்பட்டபோது, சொகுசு கப்பலில் 280 பயணிகள் இருந்ததாகவும், மனாடோ துறைமுகத்தை நோக்கி அந்த கப்பல் சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல்கள் கிடைத்ததாக ஃப்ரீ பிரஸ் ஜர்னல் வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உள்ளூர் செய்தி நிறுவனமான டெடிக்கிடம் இது தொடர்பாகப் பேசிய வடக்கு சுலவேசி பிராந்திய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செயலாளர் ஜெர்ரி ஹர்மோன்சினா, பிற்பகலில் தொடங்கி தீ (கப்பலில்) விரைவாக பரவியதாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது தலிசே தீவுக்கு அருகே கப்பல் இருந்ததாகவும் கூறினார்.

இந்த தீ விபத்தில் பயணிகள் உயிரிழந்தது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஓரிரு மணிநேரங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிக்குப் பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.