ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தெரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப் படை வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
தலிபான் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி முதல்முறையாக இந்தியா வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
டிடிபி தலைமைப் பொறுப்பை நூர் வாலி மேசுத் 2018-ல் ஏற்றா். இவரைக் குறிவைத்து ஷாஹித் அப்துல் ஹக் சதுக்கத்தில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தான் உயிரிழக்கவில்லை, பாதுகாப்பாக இருப்பதாக மேசுத் குரல் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. 9/11 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கைக்கோர்த்ததை, மேசுத் துரோகமாகக் கருதுவதாகத் தெரிகிறது. எனவே, இவர் பாகிஸ்தானுக்கு எப்போதும் தலைவலியாக இருந்துள்ளார்.
அண்மைக் காலமாகவே பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து டிடிபி பாகிஸ்தான் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடைசியாக அக்டோபர் 8 அன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் நடத்திய தாக்குதலில் இரு மூத்த அதிகாரிகள் உள்பட 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், தலிபான்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். எச்சரிக்கை விடுத்த 24 மணி நேரத்தில் இந்தத் தாக்குதலை நடத்தி முடித்திருக்கிறது பாகிஸ்தான்.
காபுலில் அமைந்துள்ள தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. இருந்தபோதிலும், தலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி முதல்முறையாக 6 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியுள்ளது தான் தற்போது பேசுபொருளாக உள்ளது. காபுலில் நடத்திய தாக்குதல் மூலம், ஒரே நேரத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு செய்தியைத் தெரிவிக்க பாகிஸ்தான் விரும்புகிறதா என்ற கோணத்தில் சர்வதேச நோக்கர்கள் இதைக் கவனித்து வருகிறார்கள். பாகிஸ்தானும் முத்தாகியின் இந்தியப் பயணத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
Pakistan | Afghanistan | Taliban | Tehreek-e-Taliban Pakistan |