ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்குத் தலா 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஜ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது, பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் உள்ளார்.
இதற்கிடையில் கடந்த 2021-ல் பிரதமராக இருந்தபோது சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட அவருக்கு சவுதி இளவரசர் விலையுயர்ந்த பல்கேரி வைர நகைகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 7.15 கோடி. பாகிஸ்தான் அரசு விதிகளின்படி வெளிநாட்டுப் பயணங்களின் போது கிடைக்கும் விலையுயர்ந்த பரிசுகளை அரசு கருவூலமான 'தோஷகானா'வில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இம்ரான் கான் அவரது மனைவியுடன் சேர்ந்து நகையின் மதிப்பைக் குறைத்துக் காட்டி, ரூ. 29 லட்சத்திற்கு இதனைச் சொந்தமாக்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதனடிப்படையில் அடியாலா சிறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி ஷாரூக் அர்ஜுமந்த் தீர்ப்பளித்தார். அதன்படி, இம்ரன் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இருவருக்கும் தலா ரூ. 52.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அதைச் செலுத்தத் தவறினால், சிறை தண்டனை அதிகரிக்கப்படும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டார் என்ற தகவல் பரவிய நிலையில், அதனை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மறுத்திருந்தது. மேலும், அவர் சிறையில் துன்புறுத்தப்படுவதாக அவரது மகன்கள் குற்றம்சாட்டிய நிலையில், அவருக்குச் சிறையில் ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகளைவிட மேம்பட்ட வசதிகள் தரப்பட்டுள்ளது.
A special court of Pakistan’s Federal Investigation Agency on Saturday sentenced former prime minister and Pakistan Tehreek-i-Insaf founder Imran Khan and his wife Bushra Bibi to 17 years of imprisonment each in the Toshakhana 2 corruption case.