2019 லாகூர் குண்டுவெடிப்பு - கோப்புப்படம் ANI
உலகம்

குண்டுவெடிப்பால் ஏற்படும் பொதுமக்கள் மரணங்கள்: உலகளவில் முதல் 10 இடத்தில் பாகிஸ்தான்!

வெடிகுண்டுகளை அதிகளவில் உபயோகித்து தாக்குதல்களை மேற்கொண்ட அரசு சாரா அமைப்புகளில் பலூசிஸ்தான் விடுதலைப் படை உலகளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

குண்டுவெடிப்பால் அதிகப்படியான பொதுமக்கள் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை அண்மையில் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த 2024-ல் மட்டும், குண்டுவெடிப்புகளால் பாகிஸ்தானில் 790 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

2023-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2024-ல் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 9% குறைந்திருந்தாலும், குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 11% அதிகரித்துள்ளது என்று இங்கிலாந்தில் இருந்து இயங்கும் தொண்டு நிறுவனமான `ஆக்‌ஷன் ஆன் ஆர்ம்டு வயலன்ஸ் (AOAV)’ தகவல் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் பாகிஸ்தானுக்கு முன்பு, முதல் ஆறு இடங்களைப் பிடித்த நாடுகள் பாலஸ்தீனம் (காசா), உக்ரைன், லெபனான், சூடான், மியான்மர் மற்றும் சிரியா ஆகும். இவை அனைத்தும் போர் அல்லது உள்நாட்டு போரில் சிக்கியுள்ளன.

பாகிஸ்தானுக்கு அடுத்ததாக ரஷ்யா, நைஜீரியா, ஏமன், ஈரான், இஸ்ரேல், சோமாலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளிலும் போர் அல்லது ஆயுத மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும், பாகிஸ்தானில் 2014-க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான குண்டுவெடிப்பு சம்பவங்கள் 2024-ல் நடைபெற்றதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு காரணமான 76% சம்பவங்கள் அரசு சாரா அமைப்புகளால் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகபட்சமாக, 119 பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு, பலூசிஸ்தான் விடுதலைப் படை காரணமாக இருக்கிறது.

வெடிகுண்டுகளை அதிகளவில் உபயோகித்து தாக்குதல்களை மேற்கொண்ட அரசு சாரா அமைப்புகளில் பலூசிஸ்தான் விடுதலைப் படை உலகளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடம் ஹிஸ்புல்லா வசம் உள்ளது.