ஈரானில் ஃபார்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு ஈரானும் ஏவுகணைகளை அனுப்பி பதில் தாக்குதல்களை நடத்தியது. இதுவரையிலான தாக்குதலில் ஈரானில் 600-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக வாஷிங்டனைச் சேர்ந்த ஈரானிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 5 நாள்களுக்கு முன்பு "ஈரானின் உச்ச தலைவர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் துல்லியமாகத் தெரியும். அவரைக் குறிவைப்பது மிக எளிது. ஆனால், அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். அவரைக் கொல்லப்போவதில்லை. குறைந்தபட்சம் தற்போதைக்கு கொல்லப்போவதில்லை. அப்பாவி மக்கள் அல்லது அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஏவுகணைகள் விழுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பொறுமையை இழந்து வருகிறோம்" என்று டிரம்ப் பதிவிட்டது பதற்றத்தை அதிகரித்தது. மேலும், இந்தப் பதிவின் தொடர்ச்சியாக வெறுமன, "நிபந்தனையின்றி சரண்" என்று மட்டும் ஒரு பதிவை பதிவிட்டதால் உலகளவில் போர் பதற்றத்துக்கான கவலை அதிகரித்தது. எனினும், ஈரான் ஒருபோதும் சரணடையாது என அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி பதிலடி தந்தார்.
இந்நிலையில் ஈரானில் 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:
"ஈரானில் ஃபார்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அனைத்து விமானங்களும் ஈரான் வான்பரப்புக்கு வெளியே வந்துவிட்டன. ஃபார்டோவில் முக்கியத் தளத்தில் முழுமையாகக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. நம் மகத்தான அமெரிக்கப் போர் வீரர்களுக்குப் பாராட்டுகள். உலகில் எந்தவொரு ராணுவத்தாலும் இதைச் செய்திருக்க முடியாது. தற்போது அமைதிக்கான நேரம்!" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
1979-ல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு முதன்முறையாக ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா.
ஈரான் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி முதலில் இணையத்தில் பதிவு செய்த டிரம்ப், பிறகு உரையாற்றினார்.
"ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஓர் அற்புதமான ராணுவ வெற்றியாகும்.
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் உலகின் முன்னணி நாட்டின் (ஈரான்) அணுஆயுத அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதுவரையில் யாரும் இணைந்து செய்திராத ஒரு கூட்டணியைப் போல இணைந்து செயல்பட்டுள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு நன்றியும் வாழ்த்துகளும். இஸ்ரேலிய ராணுவம் செய்த அற்புதமான பணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
ஈரான் அமைதியைக் கொண்டு வர வேண்டும். இல்லையெனில், வரும் காலங்களில் நிகழ்த்தப்படும் தாக்குதல் இன்னும் மோசமானதாக இருக்கும். அது மிகவும் எளிதானதும்கூட.
ஈரான் முன் இருப்பது ஒன்று அமைதி அல்லது பேரழிவு. பேரழிவு என்பது கடந்த 8 நாள்களில் சந்தித்ததைவிடப் பெரிதாக இருக்கும். அமைதி துரிதமாகத் திரும்பவில்லையெனில், ஈரானில் மீதமிருக்கும் மூன்று இலக்குகள் குறிவைக்கப்படும். வெறும் சில நிமிடங்களில் இவை குறிவைத்து முடிக்கப்படும்" என்று டிரம்ப் பேசினார்.