"உலகம் மிகவும் பெரியது! நீங்கள் அதைக் காண வேண்டுமானால் கடல் ஒன்றுதான் ஒரே வழி" வடகொரியாவின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் தந்தை சொன்ன இந்த வார்த்தை, வெறும் ஆலோசனையல்ல. அவரது குடும்பம் அடுத்த பத்தாண்டு அனுபவிக்கவிருந்த துயரத்தின் தொடக்கம்.
உலக வரைபடத்தில் வடகொரியா என்பது ஒரு மர்மமான தேசம். அங்கு ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்லக் கூட அரசின் அனுமதி தேவை. அண்டை வீட்டார் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும் சூழல். அதிபரை விமர்சித்தால் மூன்று தலைமுறைகளுக்கும் தண்டனை என அடக்குமுறைகள் நிறைந்த அந்த நிலப்பரப்பில், இங்கிருந்துகொண்டு எதையும் மாற்ற முடியாது என்பதை உணர்ந்த அந்தத் தந்தை, தன் மகன்களின் எதிர்காலத்திற்காக ஓர் உன்னத முடிவை எடுத்தார். "இங்கே எதையும் சரிசெய்ய முடியாது, இந்த நாட்டில் எதிர்காலம் என்பதே கிடையாது" என்று அவர் கூறிய வார்த்தைகள், அந்தக் குடும்பத்தை யோசிக்க வைத்தது. அந்நாட்டிலிருந்து தப்பித்து விடலாம் என்ற சிந்தனையைத் தூண்டியது. ஒரு நாட்டிலிருந்து ஒரு குடும்பம் வெளியேறுவது என்பது அவ்வளவு கடினமான விஷயமா என்று கேட்டால், வடகொரியாவின் அன்றாட வாழ்வியலை நாம் முதலில் உணர வேண்டும்.
வட கொரியாவின் மீறல்கள்
வடகொரியாவில் நிலவி வரும் மிகக்கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 2026-க்கான அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்துகிறது. கிம் ஜாங் உன் தலைமையிலான அரசாங்கம், தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மக்கள் மீது முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்தவும் மிகக்கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, 'எதிர்ப்புவாத சித்தாந்தம் மற்றும் கலாச்சார நிராகரிப்புச் சட்டம்' (Reactionary Ideology and Culture Rejection Law) மூலம் தென்கொரிய படங்கள், இசை மற்றும் ஊடகங்களைப் பார்ப்பவர்கள் அல்லது வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வரை மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்த அறிக்கையின்படி, வடகொரியாவில் நிலவும் உணவுப் பற்றாக்குறை பெரும் கவலையளிப்பதாக உள்ளது. அரசு தனது நிதியாதாரங்களை ஆயுத உற்பத்திக்காகவும், ஏவுகணை சோதனைகளுக்காகவும் செலவிடும் வேளையில், சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வெளிநாடுகளுடனான எல்லைகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படாததால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசின் உத்தரவுகளை மீறுபவர்கள் எவ்வித விசாரணையுமின்றி கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்கள் மனிதாபிமானமற்ற சூழலில் மிகக்கடினமான வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளும், முறையற்ற கைதுகளும் வடகொரியாவில் ஒரு சாதாரண நிகழ்வாகவே மாறிவிட்டன. சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்த போதிலும், வடகொரிய அரசு அடிப்படை மனித உரிமைகளைத் தொடர்ந்து நசுக்கி வருவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உளவு பார்க்கும் அண்டை வீடுகள்
இது தவிர, 'இன்மின்பன்' எனப்படும் அண்டை வீட்டுக் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட வாழ்க்கையும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அங்கு ஒவ்வொரு 20 முதல் 40 வீடுகளுக்கும் இடையில் செயல்படும் அந்தக் கண்காணிப்புக் குழு, நள்ளிரவில் யாருடைய வீட்டிற்குள்ளும் நுழைந்து சோதனையிடும் அதிகாரம் கொண்டவர்கள். ஒரு குடும்பம் திடீரென மறைந்துவிட்டால், அவர்களின் அண்டை வீட்டார்களும் தண்டிக்கப்படுவார்கள். இத்தகைய ஒரு சூழலில், ஒரு குடும்பம் முழுவதுமாகத் தப்பிப்பது என்பது தற்கொலைக்குச் சமமான முயற்சி. ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும் ஒரு சமூகத்தில், இவர்கள் தங்கள் ரகசியத்தை நெஞ்சிற்குள் பூட்டி வைத்திருந்தனர். அண்டை வீட்டார் ஒரு புன்னகையைப் பரிமாறிக்கொண்டால் கூட, அதில் ஒரு சந்தேகப் பார்வை இருக்குமோ என்று அஞ்சும் அளவிற்கு வடகொரியாவின் கண்காணிப்பு வலை பின்னிப் பிணைந்துள்ளது.
சோகமூட்டிய தென் கொரிய காட்சிகள்
அவர்கள் வடகொரியாவில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம். சீனாவிலிருந்து ரகசியமாகக் கடத்தி வரப்பட்ட ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டியின் வழியாக, செப்புக் கம்பிகளால் செய்யப்பட்ட ஆண்டெனாவை வைத்து அவர்கள் கண்ட தென்கொரியாவின் காட்சிகள், அவர்களுக்கு வலியைத்தான் கொடுத்திருக்கின்றன. "அதைப் பார்ப்பது மற்றொரு உலகத்திற்குள் நுழைவதைப் போல இருந்தது" என்று கிம் இல்-ஹியோக் குறிப்பிடும்போது, அவர்கள் அனுபவித்த அடிமைத்தனம் வெளிப்படுகிறது. தொலைக்காட்சியில் கண்ட அந்த ஒளியும், மக்களின் சிரிப்பும் அவர்களுக்கு ஒரு வேதனையான ஏக்கத்தைத் தந்தது. "ஏன் எங்களால் மட்டும் இப்படி வாழ முடியாது?" என்ற கேள்வி ஒவ்வொரு இரவும் அவர்களைத் தூங்கவிடாமல் செய்தது. அவர்கள் பார்த்த ஒவ்வொரு தென்கொரியக் காட்சியும், அவர்கள் வாழும் இருண்ட உலகத்தின் கொடூரத்தை அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.
தப்பித்தல் திட்டத்திற்கான ஆயத்தம்
இது, அந்தக் குடும்பத்திற்கு அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று அவரது தந்தை சொன்ன வார்த்தையை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது. தனது தந்தையின் அறிவுரைப்படி, இளைய மகன் கிம் யி-ஹியோக் கடலோரப் பகுதிக்கு அனுப்பப்பட்டார். ஒரு புதிய வாழ்க்கையை அங்கிருந்து அவர் தொடங்கினார். பல ஆண்டுகளாக மீன்பிடிக்கக் கற்றுக்கொண்டார், படகைச் சரிசெய்யும் கலையைக் கற்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த மஞ்சள் கடலின் வானிலை மாற்றங்கள் மற்றும் வடகொரிய ரோந்துப் படைகளின் நடமாட்டத்தைக் கூர்ந்து கவனித்தார். பாதுகாப்பு அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர் பல உத்திகளைக் கையாண்டார். அவ்வப்போது அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தும், தொடர்ந்து மீன்பிடிக்கச் சென்று திரும்பியும், தான் ஒரு சாதாரண மீனவன் என்ற பிம்பத்தை உருவாக்கினார். நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பிறகு, அவர் தனக்கென ஒரு படகைப் பெற்றார். குடும்பத்தைப் பிரிந்து தனியாக வாழ்ந்த காலத்தில் அந்தத் தந்தை தன் மகனை ஒரு தூதுவனைப் போல வளர்த்தார். அவர் தனது மகனிடம் விதைத்த சுதந்திரத்தின் கனவு, வெறும் ஆசை மட்டுமல்ல, அது ஒரு வாழ்வா சாவா போராட்டம். ஒரு தந்தையாகத் தன் மகனை அபாயகரமான பகுதிக்கு அனுப்பிவிட்டு, ஒவ்வொரு நாளும் அவன் பிடிபட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் கழித்த அந்தப் பத்து ஆண்டுகள், வார்த்தைகளால் விவரிக்க முடியாத மனவலியை அவருக்குத் தந்தன. பத்தாண்டு கால உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நாள் வந்தது.
வட கொரியாவிலிருந்து தப்பித்த கதை
2023 மே மாதம், அந்தத் தப்பித்தல் திட்டம் ஒரு கட்டாய நிலையை எட்டியது. மறைந்து வாழ்ந்திருந்தவரின் அண்ணன், அந்தத் தந்தையின் மூத்த மகன் கிம் இல்-ஹியோக்கின் மனைவி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். ஒரு தாயாக, தன் வயிற்றில் வளரும் குழந்தையாவது இந்த இருண்ட நாட்டில் பிறக்கக்கூடாது, அது பட்டினியையும் பயத்தையும் அறியக்கூடாது என்ற வைராக்கியம் அவரிடம் இருந்தது. இந்த வைராக்கியமே அவர்களை அந்தத் துணிகரமான பயணத்திற்குத் தள்ளியது. மே 6 அன்று கொட்டும் மழையில், பிடிபட்டால் மரணம் என்று தெரிந்தே அவர்கள் கடலோரக் கண்ணிவெடிகள் நிறைந்த பகுதியில் ஊர்ந்து சென்றனர். நான்கு மற்றும் ஆறு வயதுடைய சிறுவர்கள், அழுதுவிடக் கூடாது என்பதற்காகத் தானிய மூட்டைகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டனர். அதுவே அவர்கள் எவ்வளவு பெரிய அபாயத்தை எதிர்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறினால் கூடத் தங்களால் எதையும் செய்ய முடியாது என்ற நிலையில் அந்தத் தாய் துடித்த துடிப்பு, அதிகாரத்தின் கொடூரத்தை விடப் பெரியது.
சமீபத்திய ஆண்டுகளில் வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை மிகத் தீவிரமடைந்துள்ளது. மக்கள் பட்டினியால் வாடும் அதே வேளையில், அரசு தனது ஆயுத உற்பத்திக்கே முன்னுரிமை அளிக்கிறது. 'எதிர்ப்புவாத சித்தாந்தம் மற்றும் கலாச்சார நிராகரிப்புச் சட்டம்' மூலம் மக்கள் மீது மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உண்ண உணவின்றி மக்கள் செத்து மடியும் போது, அரசு ஏவுகணை சோதனைகளைச் செய்து கொண்டிருப்பது வடகொரியாவின் முரண்பாடான முகமாகும். கிம் குடும்பம் தப்பித்த அந்தப் படகில் வெறும் மீன்பிடி வலைகள் மட்டுமில்லை, ஒரு தேசத்தின் மொத்த பயமும், ஏழ்மையும், அழுகுரலும் இருந்தது. அவர்கள் தப்பித்தது ஒரு சர்வாதிகாரியிடமிருந்து மட்டுமல்ல, ஒரு தீராத பட்டினிச் சாவிலிருந்தும் தான்.
2 மணி நேர அச்சப் பயணம்
கடலில் அவர்கள் பயணித்த அந்த இரண்டு மணி நேரம், ஒவ்வொரு வினாடியும் மரணத்தின் நிழல் அவர்களைத் தொடர்ந்தது. வடகொரியக் கடற்படையின் ராடார் கண்களில் படாமல் இருக்க, அவர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டனர். ஒரு மனிதன் நடக்கும் வேகத்தில் அந்தப் படகைச் செலுத்தினர். இதனால் ராடார் அதைப் படகு என்று கருதாமல், கடலில் மிதக்கும் ஏதோ ஒரு குப்பை என்று நினைக்கும்படி செய்தனர்.
"படகு இயந்திரத்தின் சத்தத்தை விட எனது இதயத் துடிப்பு சத்தமாக இருந்தது" என்று கிம் இல்-ஹியோக் கூறும்போது, அந்தப் பயணத்தின் பயங்கரம் நம்மை உறைய வைக்கிறது. அலையடிக்கும் அந்தப் பரந்த கடலில், சிறிய இயந்திரச் சத்தம் கூடத் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தில், அவர்கள் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக வைத்தனர். அந்த இரண்டு மணி நேரம் அவர்களுக்கு இரண்டு நூற்றாண்டுகளைப் போலத் தோன்றி இருக்கும். அவர்கள் தென்கொரியாவின் யியோன்பியோங் தீவின் ஒளியைக் கண்டபோது, அவர்களின் கண்களில் நீர் பெருகியது. அவர்கள் ஒரு தேடுதல் விளக்கை ஒளிரச் செய்து சமிக்ஞை கொடுத்தனர். தென்கொரியக் கடற்படை அவர்களை நெருங்கி, "யார் நீங்கள்?" என்று கேட்டபோது, "நாங்கள் வடகொரியாவிலிருந்து தப்பி வந்தவர்கள்" என்று அவர்கள் சொன்ன பதில், பத்தாண்டு காலப் போராட்டத்தின் வெற்றியாகும்.
மரணம் கேட்ட மாபெரும் விலை
ஆனால் சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து தப்பிய குடும்பத்திடமிருந்து மரணம், மறுக்க முடியாத விலை ஒன்றைக் கேட்டது. அந்தக் குடும்பத்தைத் தப்பிக்க வைக்கப் பத்தாண்டுகள் கடலோரப் பகுதியில் ஒரு மீனவனாகப் போராடிய இளைய மகன் கிம் யி-ஹியோக், தான் விரும்பிய சுதந்திர வாழ்வை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இறந்து போனார். தென்கொரியாவிற்கு வந்து 19 மாதங்களிலேயே ஒரு விபத்தில் அவர் உயிரிழந்தார். இன்று எஞ்சிய எட்டு உறுப்பினர்கள் சியோலில் வாழ்கின்றனர். சுதந்திரமான மண்ணில் பிறந்த முதல் குழந்தையான ஏரியின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது, அவர்கள் சிரித்தாலும், அவர்களின் உள்ளத்தில் கிம் யி-ஹியோக்கின் நினைவுகள் ஒரு ஆறாத வடுவாகவே இருக்கும். இது ஏதோ ஒரு குடும்பத்தின் தப்பித்தல் கதையாக இருந்தாலும் உண்மையில் இது மனித குலத்தின் மீது சர்வாதிகாரத்தின் கோரப் பிடியைக் காட்டும் சம்பவம். சுதந்திரப் போராட்டம் என்பது உலகின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான சாட்சி. ஒரு சரித்திரம்.
Story of a North Korean family risking everything to escape oppression, hunger and surveillance. A decade of planning leads to a perilous sea journey to freedom, but the price is tragic loss, showing the human cost of dictatorship regime.!!