இலக்கியத்திற்கான 2025 ஆண்டின் நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்க்கு (László-Krasznahorkai) அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு கடந்த 1901 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
2025 ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. நான்காம் நாளான இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டது.
ஹங்கேரியில் 1954-ல் பிறந்த லாஸ்லோ, தனது சாட்டான்டாங்கோ நாவல் மூலம் புகழ்பெற்றவர். பின்நவீனத்துவ எழுத்துக்காக அறியப்படும் இவர், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியவர். தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ், வார் அண்ட் வார் உள்ளிட்ட பல்வேறு நாவல்களை எழுதியுள்ளார். 1994-ல் தனது சாட்டான்டாங்கோ படமாக்கப்பட்டபோது அதன் திரைகதையை அவரே எழுதினார். அவருக்கு இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெற்ற மூவருக்கும் 11 மில்லியன் ஸ்வீடன் குரோனர் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில், ரூ. 10.6 கோடி.