உலகம்

வேதியல் துறைக்கான நோபல் பரிசு: 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு | Nobel Prize |

உலோக - கரிம உட்கட்டமைப்புகளின் வளர்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிப்பு...

கிழக்கு நியூஸ்

வேதியல் துறைக்கான 2025 ஆண்டின் நோபல் பரிசு, சுசுமு கிடகாவா, ரிச்சார்ட் ராப்சன் மற்றும் ஒமர் யாகி ஆகிய விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு கடந்த 1901 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

2025 ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் நாளான இன்று வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இப்பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

அதன்படி, சுசுமு கிடகாவா (Susumu Kitagawa), ரிச்சார்ட் ராப்சன் (Richard Robson) மற்றும் ஒமர் யாகி (Omar M. Yaghi) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலோக - கரிம உட்கட்டமைப்புகள் மூலம் புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பு வளர்ச்சியை உருவாக்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஜப்பானைச் சேர்ந்த சுசுமு கிடகாவா, 1951-ல் பிறந்தவர். கியோடோ பல்கலைக்கழகத்தில் 1979 முனைவர் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சார்ட் ராப்சன், 1937-ல் லண்டனில் பிறந்தவர். 1962-ல் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

ஜோர்டன் நாட்டில் 1965-ல் பிறந்த ஒமர் யாகி, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 1990-ல் முனைவர் பட்டம் பெற்றவர். கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

நோபல் பரிசு பெற்ற மூவருக்கும் 11 மில்லியன் ஸ்வீடன் குரோனர் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில், ரூ. 10.6 கோடி.