படம்: https://x.com/NobelPrize
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பான் அமைப்புக்கு அறிவிப்பு

அணு ஆயுதங்கள் இல்லா உலகை அடைவதற்கான முயற்சிகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் இல்லா உலகை அடைவதற்கான முயற்சிகளுக்காக இந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இதில் தப்பிப் பிழைத்தவர்களால் நடத்தப்படும் இயக்கம் தான் நிஹோன் ஹிடாங்க்யோ. இந்த இயக்கம் அணு ஆயுதங்களுக்கு எதிரான தேவை குறித்து உலகை நினைவூட்டுவதற்காக ஐ.நா. மற்றும் அமைதிக்கான பல்வேறு மாநாடுகளுக்குப் பிரதிநிதிகளை அனுப்புவது என நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மனித இன வரலாற்றில், இவ்வுலகம் கண்ட மிக மோசமான ஆயுதம் அணு ஆயுதம் என்பதை உலகுக்கு நினைவூட்டுவது மதிப்புமிக்கது என்று நோபல் குழு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை முதல் 2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவத்துக்கான நோபல் பரிசு மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் மரபணு கட்டுப்பாட்டில் இதன் பங்கு குறித்து கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பக்கெர், டெமிஸ் ஹஸ்ஸாபில், ஜாம் கெம்பர் ஆகிய மூன்று பேருக்குப் பகிர்ந்தளித்து அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹோப்ஃபீல்டு, ஜியோஃபெரி ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.