உலகம்

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு: 3 பேராசிரியர்களுக்கு அறிவிப்பு | Nobel Prize |

தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியின் கொள்கைக்காகப் பரிசு அறிவிப்பு...

கிழக்கு நியூஸ்

பொருளாதார அறிவியலுக்கான 2025 ஆண்டின் நோபல் பரிசு 3 பொருளியல் பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு கடந்த 1901 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

2025 ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் இன்று பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசு 3 பொருளியல் பேராசிரியர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2025 ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு ஜோயல் மோக்யர் (Joel Mokyr), பிலிப் ஆகியான் (Philippe Aghion) மற்றும் பீட்டர் ஹவ்விட் (Peter Howitt) ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடையாளம் காணும் கொள்கைகளை வகுத்ததற்காக இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நெதர்லாண்டில் 1946-ல் பிறந்த ஜோயல் மோக்யர், 1974-ல் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் 1956-ல் பிறந்த பிலிப் ஆகியான், அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 1987-ல் முனைவர் பட்டம் பெற்றவர். லண்டன் பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளி, பாரிஸில் உள்ள பிரான்ஸ் கல்லூரி உள்ளிட்டவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

கனடாவில் 1946-ல் பிறந்த பீட்டர் ஹவ்விட், அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் 1973-ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

நோபல் பரிசுத் தொகையாக 11 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனர் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 10.6 கோடி.