கோப்புப்படம் Nathan Howard
உலகம்

டிரம்புக்கு நோபல் பரிசு இல்லை: மௌனம் கலைத்தது வெள்ளை மாளிகை! | Donald Trump |

ஒவ்வொரு போரை நிறுத்தியதற்கும் தலா ஒரு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அவர் வெளிப்படையாகவே கூறினார்.

கிழக்கு நியூஸ்

அமைதியைவிட அரசியல் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக நோபல் குழுவை விமர்சித்துள்ளது வெள்ளை மாளிகை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரி வந்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் கம்போடியா, அர்மேனியா மற்றும் அஜர்பைஜான், கோசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோபியா, ருவாண்டா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் கோரி வருகிறார். ஒவ்வொரு போரை நிறுத்தியதற்கும் தலா ஒரு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அவர் வெளிப்படையாகவே கூறினார்.

இஸ்ரேல் - காஸா போரையும் தான் முடிவுக்குக் கொண்டு வருவதாக அவர் கூறி வருகிறார். ஆனால், இந்தப் போர் இன்னும் முழுமையாகக் கைவிடப்படவில்லை. காஸாவுக்கு சிறிய அளவில் நிவாரணம் கிடைத்தாலும், டிரம்பின் போர் நிறுத்தத் திட்டத்தின் முதற்கட்டம் இந்த வாரம் தான் நடைமுறைக்கு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் மூன்றாவது தரப்பின் தலையீடு எதுவும் இல்லை என்பதை இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை நிறுத்த டிரம்ப் தொடர்ச்சியாக நிறுத்த முயற்சித்தாலும், அந்தப் போர் முடிந்தபாடில்லை. டிரம்பின் போர் நிறுத்த விருப்பத்துக்கு ரஷ்யா இணங்காமலே உள்ளது.

இருந்தபோதிலும் பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ஆதரவுக் குரல்கள் எழுப்பி வந்தன.

இந்நிலையில் தான் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் முதல் செய்தி, டிரம்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது செய்தி, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அயராது உழைத்த காரணத்தால் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாதது குறித்து டிரம்ப் இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், தொடர்ச்சியாக அவர் பேசி வந்ததைப் பார்க்கும்போது நிச்சயமாக அவர் இதுகுறித்து கருத்து எதையாவது தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதிலும், டிரம்புக்கு முன்பு வெள்ளை மாளிகை இதுபற்றிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதிவிட்டுள்ளதாவது:

"அதிபர் டிரம்ப் தொடர்ந்து அமைதிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வார், போர்களை நிறுத்துவார், உயிர்களைக் காப்பாற்றுவார். அவர் மனிதாபிமானம் கொண்டவர். சாத்தியமற்றதைக்கூட சாத்தியமாக்கும் மனநிலை கொண்டவர். அவரைப்போன்று யாராலும் இருக்க முடியாது.

அமைதியைவிட அரசியல் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை நோபல் குழு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Peace Prize | Donald Trump | White House | The Nobel Prize | Maria Corina Machado |