அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்த ஸோரான் மம்தானி 
உலகம்

அதிபர் டிரம்ப் பாசிஸ்ட்டா?: ஸோரான் மம்தானியைக் கேட்ட செய்தியாளர்கள் | Donald Trump |

விளக்கிக் கொண்டிருப்பதை விட எளிமையானது. நான் ஏதும் நினைத்துக்கொள்ள மாட்டேன்....

கிழக்கு நியூஸ்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பாசிஸ்ட் என்று இப்போதும் சொல்வீர்களா என்று அடுத்த நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிபர் டிரம்ப் தட்டிக்கொடுத்து ஆம் என்று சொல்லச் சொன்னது ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் அடுத்த மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தீவிரமான இடதுசாரி சிந்தனையாளர். மேயர் தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஸோரான் மம்தானி பாசிஸ்ட் என்று விமர்சித்திருந்தார். அதிபர் டிரம்ப்பும் ஸோரான் மம்தானியை கம்யூனிஸ்ட் என்று விமர்சித்திருந்தார். மேலும், மம்தானி தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க்கிற்கு தர வேண்டிய நிதியை நிறுத்த வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், மேயர் தேர்தலில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார்.

இதையடுத்து நேற்று (நவ. 21) அதிபர் டிரம்ப்பை ஸோரான் மம்தானி வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது நியூயார்க் நகரின் வருங்கால வளர்ச்சிப் பணிகள் உட்பட பல விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

அப்போது அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:-

“நியூயார்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோரான் மம்தானியுடனான சந்திப்பு சிறப்பானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்தது. மம்தானி எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறாரோ நான் அவ்வளாவு மகிழ்ச்சியாக இருப்பேன். புதிய மேயர் அவர் பணிகளில் வெற்றி பெற விரும்புகிறேன். எங்களுக்குள் ஒரே ஒரு விஷயம் தான் பொதுவானது. அது நியூயார்க் நகரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். அதை நாங்கள் சிறப்பாகச் செய்ய வாஞ்சையோடு இருக்கிறோம். மேலும், மேயர் பதவியேற்றதும் மம்தானி அதிக கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் எனக் கோருகிறேன். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் தனது பார்வைகளில் சிலவற்றில் மாற்றம் செய்வார் என்று நம்புகிறேன். நான் அதிபரான பின்னர் எனது சில பார்வைகளும் மாறியுள்ளன. மம்தானிக்கும் அது நிகழும் என நான் நம்புகிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து ஸோரான் மம்தானி பேசியதாவது:-

“அதிபர் டிரம்ப் கூறியதுபோல் இந்தச் சந்திப்பு நியூயார்க் நகரின் நலன்கள் மீதான பரஸ்பர அன்பு, ஈர்ப்பில் கவனத்தை குவிப்பதாக இருந்தது. இது ஆக்கபூர்வமான சந்திப்பாக இருந்தது. நியூயார்க் நகரின் வீட்டு வாடகை, மளிகைப் பொருட்களின் விலை, அத்தியாவசிப் பொருட்களின் விலைவாசி பற்றி நாங்கள் பேசினோம். மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளைப் பற்றி பேசினோம். நியூயார்க் நகரின் 8.5 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தோம்.” என்றார்.

அப்போது மம்தானியிடம் செய்தியாளர் ஒருவர், “அதிபர் டிரம்ப்பை நீங்கள் பாசிஸ்ட் என விமர்சித்துள்ளீர்கள். இப்போதும் அதைச் சொல்வீர்களா?” என்று கேட்டார். அதற்கு மம்தானி விளக்கமளிக்க முயன்றார். அப்போது குறுக்கிட்ட டிரம்ப், ”நீங்கள் ஆம் என்று சொல்லிவிடுங்கள். அது விளக்கிக் கொண்டிருப்பதை விட எளிமையானது. நான் ஏதும் நினைத்துக்கொள்ள மாட்டேன்” என்று கூறி தட்டிக் கொடுத்தார். இந்தச் செயல் கவனம் பெற்றுள்ளது.

New York City mayor-elect Zohran Mamdani met with President Donald Trump at the White House on November 21, after which they interacted with the press.