எனது ஆட்சிகாலம் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும் என, அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையை நெருங்கிய டொனால்ட் டிரம்ப், தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசினார்.
ஃப்ளோரிடாவில் தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில், டொனால்ட் டிரம்ப் பேசியவை பின்வருமாறு,
`அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு யாரும் இதைப் போன்ற ஒரு இயக்கத்தைப் பார்த்ததில்லை. இந்த நாட்டில் இதற்கு முன்பு இதைப் போன்ற ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள் என எண்ணுகிறேன். ஒரு புதிய நிலையை அடைவதற்கான முக்கியத்துவத்தை அளித்து, நம் நாட்டை குணப்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட இருக்கிறோம்.
நமது நாட்டுக்கு தற்போது உதவி தேவைப்படுகிறது. நமது எல்லைகளை சரி செய்யப்போகிறோம். நமது நாடு தொடர்பான அனைத்தையும் சரி செய்யப்போகிறோம். இந்த இரவில் நாம் வரலாறு படைத்திருக்கிறோம். யாருமே எதிர்பாக்காத வகையில் பல தடைகளை முறியடித்துள்ளோம்.
என்ன நடத்திருக்கிறது என்று பாருங்கள், நம்பமுடியாத ஒன்றை நாம் நடத்திக் காட்டியிருக்கிறோம். இதைத் போன்ற ஒரு அரசியல் வெற்றியை இதற்கு முன்பு நமது நாடு பார்த்ததில்லை. 47-வது அமெரிக்க அதிபராகும் மிகப்பெரும் கௌரவத்தை எனக்கு வழங்கிய அமெரிக்க மக்களுக்கு நன்றி.
உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும், உங்களின் வருங்காலத்துக்காகவும் ஒவ்வொரு நாளும் என் மூச்சு உள்ளவரை நான் போராடுவேன். உங்களின் தகுதிக்கான ஒரு வலிமையான, பாதுகாப்பான, வளமான அமெரிக்காவை வழங்கும் வரை நான் ஒய்வெடுக்கமாட்டேன். இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்.
இந்த அற்புதமான வெற்றியின் மூலம், மீண்டும் அமெரிக்காவை மிகச்சிறந்த நாடாக மாற்றுவோம். வெகுமக்கள் வாக்குகளையும் நாம் வென்றது மிகச் சிறப்பானது. அன்பின் உணர்வு இந்தப் பெரிய அரங்கத்தில் வெளிப்படுகிறது. அமெரிக்கா நமக்கான மகத்தான தீர்ப்பை வழங்கியுள்ளது’ என்றார்.