ANI
உலகம்

முஹமது யூனுஸுக்கு எதிராக கலகமா?: வங்கதேச ராணுவம் அவசர ஆலோசனை!

தங்கள் மேற்பார்வையின் கீழ் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான நடவடிக்கையில் ராணுவம் இறங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

முஹமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசை அகற்றி, அந்நாட்டில் விரைவில் ராணுவ ஆட்சி அமலாக வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே செய்து வெளியிட்டுள்ளது. வங்கதேச ராணுவத்தின் தலைமைத் தளபதி வக்கீர்-உஸ்-ஸமான் தலைமையில் வங்கதேச ராணுவத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 24) நடைபெற்றுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வங்கதேச ராணுவத்தைச் சேர்ந்த ஐந்து லெப்டினன்ட் ஜெனரல்கள், எட்டு மேஜர் ஜெனரல்கள், தன்னாட்சி படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் ராணுவத் தலைமையக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றார்கள்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்தாண்டு வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டம், மாபெரும் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து, அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதைத் தொடர்ந்து அமைந்த இடைக்கால அரசுக்கு பிரபல பொருளாதார நிபுணரும், நோபல் வெற்றியாளருமான முஹமது யூனுஸ் தலைமையேற்றார்.

ஆனால், இடைக்கால அரசால் வங்கதேச மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும், இதனால் மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்காத வகையில் ஸ்திரத்தன்மையை நிறுவுதற்காக வங்கதேச ராணுவம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும்படி அந்நாட்டு ஜனாதிபதியிடம் ராணுவம் அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தங்கள் மேற்பார்வையின் கீழ் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான நடவடிக்கையில் ராணுவம் இறங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், கடந்த ஓரிரு மாதங்களாக வங்கதேச ராணுவத்திற்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர்கள் தலைவர்களும் பேசி வருவதால், அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் இறங்க ராணுவம் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.