உலகம்

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா கிளம்பினார் பிரதமர் மோடி

இந்த பயணத்தில் விளாடிவோஸ்டோக்-சென்னை கப்பல் வழித்தடம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது

ராம் அப்பண்ணசாமி

22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று (ஜூலை-8) காலை ரஷ்யா கிளம்பினார் பிரதமர் மோடி. ஜூலை 8, 9-ம் தேதிகளில் ரஷ்யாவில் இருக்கும் மோடி, 9-ம் தேதி ரஷ்யாவில் இருந்து கிளம்பி ஆஸ்திரியாவுக்குச் செல்கிறார்.

`வருடாந்திர மாநாடு கொஞ்சம் தாமதமாக நடக்கிறது. இரண்டு நாடுகளும் ஒன்றாக செயல்பட்ட வலுவான வரலாறு உள்ளது. வருடாந்திர உச்சி மாநாடுக்கான தேவையை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்’ என்று மோடியின் ரஷ்ய பயணம் குறித்து கருத்து தெரிவித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

கடைசியாக 2019-ல் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அதற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் அங்கே செல்கிறார். கடந்த பிப்ரவரி 2022-ல் தொடங்கி இன்னமும் ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் வேளையில், மோடியின் ரஷ்ய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தப் பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்தும், சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான அரசியல் நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். இன்று மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் மதிய விருந்து அளிக்கிறார். இந்தப் பயணத்தில் ரஷ்யா வாழ் இந்தியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி.

மோடியின் ரஷ்ய பயணத்தில் விளாடிவோஸ்டோக்-சென்னை கப்பல் வழித்தடம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. மேலும் இந்திய ரூபாயில் ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வது குறித்தும் புதினுடன் ஆலோசிக்க உள்ளார் மோடி.

ரஷ்யாவிலிருந்து கிளம்பி ஜூலை 9-ல் ஆஸ்திரியா நாட்டுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. இதனால் 41 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரியாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.