ANI
உலகம்

ரஷ்யாவின் மிக உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி

இந்த சந்திப்பில் காலநிலை மாற்றம், துருவ ஆராய்ச்சி, கடல் வழி போக்குவரத்து, அணு உலைகள், விண்வெளி ஆராய்ச்சி, வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

ராம் அப்பண்ணசாமி

ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று 22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜூலை 8, 9-ல் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

ஜூலை 8-ல் மாஸ்கோவை சென்றடைந்த மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின் அவருக்கு விருந்தளித்தார். பின் இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். ஜூலை 9-ல் மாஸ்கோவில் வாழும் இந்தியர்களைச் சந்தித்து உரையாடினார் புதின்.

இந்தியர்களுடனான சந்திப்பு முடிந்ததும், 22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார் மோடி. இந்த மாநாட்டில், இந்தியா ரஷ்யா இடையிலான வர்த்தகத்தை 2030-ம் வருடத்தில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

மேலும் காலநிலை மாற்றம், துருவ ஆராய்ச்சி, கடல் வழி போக்குவரத்து, புதிய அணு உலைகள், விண்வெளி ஆராய்ச்சி, வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜி20, பிரிக்ஸ், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற இந்த மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி அங்கே அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் பலர், கட்டாயத்தின் பேரில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த பிரச்சனை குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் குறிப்பிட்டார் மோடி. இதனை அடுத்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து இந்தியர்களை திருப்பி அனுப்ப மோடியிடம் புதின் உத்தரவாதம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பில் மோடிக்கு, ரஷ்யாவின் மிக உயரிய விருதான `ஆர்டர் ஆஃப் செயிண்ட் அண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருதை அளித்தார் புதின். இந்த விருது இந்தியா ரஷ்யா இடையிலான உறவை முன்னெடுத்துச் சென்றதுக்காக மோடிக்கு கடந்த 2019-ல் ரஷ்ய அரசால் அறிவிக்கப்பட்டது.

புதின் உடனான உச்சி மாநாடு முடிந்ததும், ரஷ்யாவிலிருந்து கிளம்பி இரு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஆஸ்திரியா நாட்டுக்குச் சென்றுள்ளார் பிரதமர் மோடி.