அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்கா & இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கி, 30 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி, ராணுவ தலைவர் அலி லரிஜானி, புரட்சிகர பாதுகாப்புப் படையின் உள்நாட்டு துணை ராணுவப் பிரிவான பசிஜின் தளபதி குலாம்ரெஸா சுலைமானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்து வரும் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளையும் இஸ்ரேலையும் தாக்கி வருகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பேச்சு
இதற்கிடையே கடந்த மார்ச் 24 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக உரையாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, “அதிபர் டிரம்பிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து நாங்கள் பயனுள்ள வகையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியா, பதற்றத்தை விரைவில் குறைத்து அமைதியை மீட்டெடுப்பதை ஆதரிக்கிறது. ஹார்முஸ் நீரிணை திறந்த நிலையில், பாதுகாப்பாகவும் அனைவரும் அணுகக்கூடியதாகவும் இருப்பது உலகம் முழுவதற்கும் மிகவும் அவசியமானது. அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான முயற்சிகள் தொடர்பாக தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளோம்.” என்று கூறியிருந்தார்.
தொலைப்பேசி உரையாடலில் எலான் மஸ்க்?
இதற்கிடையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் இது குறித்து வெளியான கட்டுரை ஒன்றில் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர், இந்திய பிரதமருடன் அமெரிக்க அதிபர் பங்கேற்ற தொலைப்பேசி உரையாடலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கும் பங்கேற்றார் என்று கூறியதாக செய்தி வெளியிட்டது.
வெளியுறவுத்துறை மறுப்பு
இந்நிலையில், இந்த கருத்தைத் திட்டவட்டமாக மறுத்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- “நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தியை நாங்கள் பார்த்தோம். மார்ச் 24 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையில் மட்டுமே நடைபெற்றது. இந்த உரையாடல் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
The Ministry of External Affairs has clarified that Elon Musk did not participate in the telephone conversation between US President Donald Trump and Prime Minister Narendra Modi.