உலகம்

அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதி இடிந்து விழுந்த பாலம்! (விடியோ)

மேரிலாந்து மாகாண ஆளுநர் வெஸ் மூர் விபத்து காரணமாக அங்கு அவசர நிலையைப் பிறப்பித்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் சரக்குக் கப்பல் மோதியதில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

படாப்ஸ்கோ நதி மீது சுமார் இரண்டரை கி.மீ. தூரத்துக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் அடியில் இலங்கைக்குச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று இன்று அதிகாலை (உள்ளூர் நேரப்படி) கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இந்த சரக்குக் கப்பல் 300 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும் கொண்டது.

இந்தக் கப்பல் மோதியதில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் ஆற்றுக்குள் சரிந்து விழுந்தது. இந்தப் பாலத்தில் வாகனப் போக்குவரத்து பயன்பாட்டில் இருப்பதால், பாலத்தில் சென்றுகொண்டிருந்தவர்கள், பாலம் சரிந்ததில் ஆற்றில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து அமெரிக்கக் கடலோர காவல் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இவர்களைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள், அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மீட்புப் பணிக்கு உதவிகளைச் செய்யத் தொடங்கின. இந்த விபத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்தது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

மேரிலாந்து மாகாண ஆளுநர் வெஸ் மூர் விபத்து காரணமாக அங்கு அவசர நிலையைப் பிறப்பித்துள்ளார்.