உலகம்

அரசுமுறைப் பயணமாக முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்த மாலத்தீவு அதிபர் முய்ஸு

அதிபர் தேர்தல் பரப்புரையின்போது, மாலத்தீவிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் முய்ஸு.

ராம் அப்பண்ணசாமி

மாலத்தீவின் அதிபர் மொஹமத் முய்ஸு அரசு முறைப் பயணமாக முதல்முறையாக இந்தியாவுக்கு இன்று (அக்.06) வருகை தந்துள்ளார்.

கடந்த 17 நவம்பர் 2023-ல் மாலத்தீவு நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார் மொஹமத் முய்ஸு. அதிபர் பதவியேற்று 11 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் அரசுமுறைப் பயணமாக முதல்முறையாக இன்று (அக்.06) இந்தியாவுக்கு வந்துள்ளார் முய்ஸு. மாலத்தீவு தலைநகர் மாலேவிலிருந்து விமானம் மார்க்கமாகக் கிளம்பி இன்று மாலை தில்லியை வந்தடைந்தார் முய்ஸு.

தில்லியில் மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், அதிபர் முய்ஸுவை வரவேற்றார். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ள முய்ஸு வரும் அக்.10 வரை இந்தியாவில் இருப்பார் என்று மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முய்ஸுவுக்கு முன்பு பதவியில் இருந்த மாலத்தீவு அதிபர்கள் பலரும், தாங்கள் அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகு, தங்களது முதல் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதே வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால் அதிபர் பதவி ஏற்றதும் முதலில் துருக்கி நாட்டிற்கும், பிறகு சீனாவுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்றார் முய்ஸு.

அதிலும், மாலத்தீவு அதிபர் தேர்தல் பரப்புரையின்போது, தான் பதவிக்கு வந்ததும் மாலத்தீவிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் முய்ஸு.

கடந்த ஜூனில் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு விழாவுக்கு வருகை தந்திருந்தாலும், அரசுமுறைப் பயணமாக முதல்முறையாக முய்ஸு இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.