உலகம்

தேசத்தை இணைக்கவே அதிபர் தேர்தலில் இருந்து விலகல்: ஜோ பைடன்

ராம் அப்பண்ணசாமி

தேசத்தை இணைக்க அடுத்த தலைமுறைக்கு வழிவிடவே அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்த விலகியதாக விளக்கமளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

2025-ல் புதிதாகப் பதவியேற்க உள்ள அமெரிக்க அதிபரைத் தேர்தெடுக்க வரும் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக முன்பு அறிவித்து அதற்கான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்.

திடீரென கடந்த ஜூலை 21-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பைடன். மேலும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அவர் முன்மொழிந்தார். இந்நிலையில் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியது குறித்து முதல் முறையாக விளக்கமளித்துள்ளார் பைடன். அவர் பேசியது பின்வருமாறு:

`ஜனநாயகத்தைப் பாதுகாப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. இதற்குத் தடையாக எதுவும் இருக்க முடியாது. நான் இந்த (அதிபர்) பொறுப்பை மதிக்கிறேன். அதை விட தேசத்தை அதிகமாக நேசிக்கிறேன். அமெரிக்க அதிபராக எனது செயல்பாடு மற்றும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான எனது பார்வையை ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட எனக்குத் தகுதி உள்ளது.

ஆனால், ஜனநாயகத்தைக் காக்க இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். அதற்கு புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சிறந்த வழியாகும். நாட்டை ஒன்றிணைக்கும் பணியை இளம் தலைமுறையினர் சீரான முறையில் செய்வார்கள். இங்கு சர்வாதிகாரிகள் ஆட்சி செய்ய முடியாது, மக்களே ஆட்சியாளர்கள்.

துணை அதிபர் கமலா ஹாரீஸ் திறமைமிக்கவர். நம் தேசத்தின் சிறந்த தலைவர்களில் ஒருவராக அவர் பணியாற்றியுள்ளார். இப்போது முடிவு அமெரிக்க மக்களிடம் உள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபட அனுபவம்மிக்கவர்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அதேநேரம் இளம் தலைமுறையினருக்கும் வாய்ப்பு உண்டு’.