உலகம்

பிரிட்டனில் ஆட்சியைப் பிடித்த தொழிலாளர் கட்சி

முன்னெப்போதும் இல்லாத அளவில், அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 9 பேர் இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

பிரிட்டன் பொதுத் தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதன்மூலம், கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

பிரிட்டனில் மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கும் ஜூலை 4-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

பிரிட்டனில் ஆட்சியமைக்க 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கெயிர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 409 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 117 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியைச் சந்தித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில், அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 9 பேர் தோல்வியைச் சந்தித்துள்ளார்கள்.

இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்த ரிஷி சுனக், கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்து தெரிவித்தார். தோல்விக்குப் பொறுப்பேற்பதாகவும் ரிஷி சுனக் கூறினார்.

தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகவுள்ளார். வெற்றிக்குப் பிறகு உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர் "இன்று நாம் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம். மாற்றத்துக்கானப் பணியைத் தொடங்கவுள்ளோம்" என்றார்.