உலகம்

ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதி!

கிழக்கு நியூஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, கட்சிப் பிரதிநிதிகளின் போதுமான ஆதரவை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பரில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அதிபர் ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்கள்.

அதிபர் ஜோ பைடனுக்கான செல்வாக்கு குறைவாக இருப்பதாகவும், வெற்றி வாய்ப்பு டிரம்புக்கே அதிகம் இருப்பதாகவும் விமர்சனங்கள், பேச்சுகள் எழுந்தன. அதிபர் தேர்தலுக்கானப் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகுவது தொடர்பாக ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் வரத் தொடங்கின. டிரம்புடன் நடைபெற்ற விவாதத்தில் தடுமாறியது, டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டது என சூழல்கள் அனைத்தும் பைடனுக்கு எதிராக மாறின.

இதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் 21 அன்று அறிவித்தார். மேலும், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மிஷெல் ஒபாமா உள்பட முக்கியத் தலைவர்கள், வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் பெரும்பான்மை பிரதிநிதிகள் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவைத் தெரிவித்தார்கள்.

கமலா ஹாரிஸின் பிரசாரத்துக்கு ஆதரவாக ஒரே வாரத்தில் ரூ. 1,674 கோடி நன்கொடை வசூலானதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், டிரம்பைவிட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருவதாகக் கணிப்புகளும் கூறி வந்தன.

இதனிடையே, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் படிவத்தில் கமலா ஹாரிஸ் கடந்த மாதம் 27 அன்று கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான போதிய பிரதிநிதிகளின் வாக்குகளை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்க, கமலா ஹாரிஸ் 2,350 வாக்குகளைப் பெற வேண்டும். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான தேர்தல் திங்கள்கிழமை வரை நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளிலேயே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதைப் பெருமையாகக் கொள்கிறேன். இதற்கான முன்மொழிதலை அடுத்த வாரம் முறைப்படி ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், அதிபர் வேட்பாளராகத் தேர்வாவதற்குப் போதிய பிரதிநிதிகளின் ஆதரவை ஏற்கெனவே பெற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த மாத இறுதியில் சிகாகோவில் அனைவரும் ஒரு கட்சியாக ஒன்றிணைந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.