உலகம்

கமலா ஹாரிஸ் இந்தியரா? கருப்பினத்தவரா?: டொனால்ட் டிரம்ப் கேள்வி

கிழக்கு நியூஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இந்தியரா கருப்பினத்தவரா என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் தன்னைக் கருப்பினத்தவராக அடையாளப்படுத்திக்கொள்ளும் கமலா ஹாரிஸுக்கு டிரம்பைவிட ஆதரவு குவிந்து வருவதாகக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில், சிகாகோவில் கருப்பின ஊடகவியலாளர்களுக்கான தேசிய சங்கத்தில் டொனால்ட் டிரம்ப் கலந்துரையாடினார். அப்போது கமலா ஹாரிஸ் இந்தியரா? கருப்பினத்தவரா? என்று டிரம்ப் கேள்வியெழுப்பினார்.

"கமலா ஹாரிஸ் எப்போதுமே இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டவர். இந்தியப் பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்துள்ளார். இவர் கருப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பினத்தவராக மாறினார். தற்போது தன்னைக் கருப்பினத்தவராக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். எனவே, அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா என்று எனக்குத் தெரியாது.

இரண்டில் ஏதேனும் ஒன்றை நான் மதிக்கிறேன். ஆனால், அவர் அப்படியல்ல. இத்தனை நாள்களாக இந்தியராக இருந்த கமலா ஹாரிஸ், திடீரென கருப்பினத்தவராக மாறியுள்ளார்" என்றார் டிரம்ப்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், "அதே பழைய கதைதான். பிரிவினைவாதம் மற்றும் மரியாதை குறைவான நடத்தை. உண்மையைப் பேசக்கூடிய ஒரு தலைவரைப் பெற அமெரிக்க மக்கள் தகுதியானவர்கள். நம்முள் இருக்கும் வேறுபாடுகள் நம்மைப் பிரிக்காது, அதுவே நம் பலம் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு தலைவர் நமக்குத் தேவை" என்றார்.