உலகம்

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் மகன்: சிறை செல்வாரா ஹண்டர் பைடன்?

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது சட்டவிரோதமாக போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் 25 வருடங்கள் வரை அவருக்குச் சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

6 வருடங்களுக்கு முன்பு ஹண்டர் பைடன், `கோல்ட் கோப்ரா’ வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அந்தத் துப்பாக்கியை வாங்குவதற்காக அவர் நிரப்பிய படிவத்தில் தனக்கு போதைப் பழக்கம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார் ஹண்டர் பைடன். ஆறு வருடங்களுக்கு முன்பு அப்படிக் குறிப்பிட்டது இப்போது அவருக்குப் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் அமெரிக்க நாட்டுச் சட்டத்தின்படி போதைப் பழக்கம் இருக்கும் நபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. ஆனால் 2018-ல் இந்த துப்பாக்கி வாங்கிய சமயத்தில் கோக்கைன் போதை மருந்தை அடிக்கடி உபயோகித்து வந்துள்ளார் ஹண்டர் பைடன்.

சட்டவிரோதமாக போதைப் பொருள் பயன்படுத்தியது, உண்மையை மறைத்து துப்பாக்கி வாங்கியது என ஹண்டர் பைடன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் டெலாவேர் மாகாணத்தின் வில்மிங்டன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன. தண்டனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இந்த வழக்கில் 25 வருடங்கள் வரை ஹண்டர் பைடனுக்கு சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வில்மிங்டன் நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதாக அறிவித்த அதிபர் ஜோ பைடன், தன் மகனுக்காக அதிபர் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கப்போவதில்லை என முன்பு தெரிவித்திருந்தார்.

தண்டனை விவரங்கள் வெளியான பிறகு, ஹண்டர் பைடனின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரி ஏய்ப்பு செய்ததாக ஏற்கனவே ஹண்டர் பைடன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடைபெறும்.