உலகம்

ஜப்பானில் அரசாங்கமே அறிமுகப்படுத்தும் 'டேடிங்' செயலி: காரணம் என்ன?

கிழக்கு நியூஸ்

ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக, அந்த நாட்டு அரசு டேடிங் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஜப்பான் மக்கள் தொகை வெறும் 12.39 கோடி. கடந்தாண்டில் 7.27 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை நிலையாக இருக்க கருவுறுதல் விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், ஜப்பானில் இது 1.2 ஆகக் குறைந்துள்ளது. 2.1 என்ற விகிதத்தை அடைய அந்த நாடு கடந்த 50 ஆண்டுகளாகத் திணறி வருகிறது. 2023 பிறப்பு விகிதத்தைக் காட்டிலும் இறப்பு விகிதம் இரண்டு மடங்கு பதிவாகியுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்துள்ளது. அதேசமயம், விவாகரத்தின் எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன.

இந்தச் சவால்களை எதிர்கொள்ள, அந்த நாட்டு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குழந்தைகள் நல வசதிகளை விரிவாக்கம் செய்வது, பெற்றோர்களுக்கு வீட்டு மானியங்கள் வழங்கப்படுவது, குறிப்பிட்ட பிராந்தியப் பகுதிகளில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதியினருக்கு நிதியுதவிகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசு டேடிங் (Dating) செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. தற்போது முதற்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களிடையே ஒரு தொடர்பை உண்டாக்க இந்த செயலி வழிவகை செய்யவுள்ளது. டோக்கியோ பெருநகர அரசு வழங்கிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே இந்தச் செயலியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.