உலகம்

இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தரப்படும்: ஹௌத்தி

கடந்த ஜூலை 19-ல் முதல் முறையாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவ் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது ஹௌத்தி. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

ராம் அப்பண்ணசாமி

ஜூலை 21-ல் தங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்று ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌத்தி கிளர்ச்சியாளர் குழு அறிவித்துள்ளனர்.

அரேபியக் கடலை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஏமன். அந்நாட்டின் ஆளும் அரசுக்கு எதிராக தொண்ணூறுகளில் கிளர்ச்சியில் ஈடுபட்டது ஹௌத்தி கிளர்ச்சிக்குழு. 2014-ல் ஹௌத்தி கிளர்ச்சிக்குழுவின் பலம் பல மடங்கு அதிகரித்து அன்றைய ஏமன் ஆளும் அரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதன் பிறகு தங்களை எதிர்த்தது மேற்கொள்ளப்பட்ட சௌதி அரசு தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளை ஈரான் அரசின் ஒத்துழைப்புடன் சமாளித்தது ஹௌத்தி கிளர்ச்சிக்குழு. இன்றைய நிலவரப்படி ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட அந்நாட்டின் பெரும்பாலான பகுதியில் ஹௌத்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் நவம்பரில், இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி பாலஸ்தீனுக்கான தங்கள் ஆதரவை அறிவித்தது ஹௌத்தி கிளர்ச்சிக்குழு. காஸா பகுதி மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் தாக்குதல் நிறுத்தும் வரை, இஸ்ரேல் மீதான தங்களின் தாக்குதல் தொடரும் என்றும் அப்போது அறிவித்தது ஹௌத்தி.

கடந்த ஜூலை 19-ல் முதல் முறையாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவ் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது ஹௌத்தி. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதை அடுத்து கடந்த ஜூலை 22 அன்று செங்கடலை ஒட்டி இருக்கும் இஸ்ரேலிய நகரம் எயிலட்டைக் குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது ஹௌத்தி. இந்த ஹௌத்தி ஏவுகணைத் தாக்குதலை நடுவானில் வைத்து தங்களின் ஏரோ-3 பாதுகாப்பு அமைப்பு முறியடித்துவிட்டதாக அறிவித்தது இஸ்ரேல்.

ஹௌத்தியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் நாட்டின் ஹோடெய்டா துறைமுகத்தின் மீது அதே நாளில் வான்வழித் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதைத் தொடர்ந்து ஹௌத்தியின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரே, `இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அளவில் தக்க பதிலடி தரப்படும்’ என்று தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.