முனைவர் இராஜ் எலாஹி 
உலகம்

அமெரிக்க தளங்கள் மீது தாக்க யாரும் துணியவில்லை; ஆனால் நாங்கள் தாக்கினோம்: ஈரான்

நெதன்யாகு நம்பகமானவர் அல்ல. சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டங்களை அவர் மதிக்கவில்லை.

ராம் அப்பண்ணசாமி

முன்னெப்போதும் இல்லாத வகையில், கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தத் தயங்கமாட்டோம் எம்றும், இந்தியாவிற்கான ஈரானின் தூதரான முனைவர் இராஜ் எலாஹி இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், இஸ்ரேலுடனான மோதலில் அமெரிக்கா நுழைவதை ஈரான் முன்பே எதிர்பார்த்ததாகவும், அதற்கேற்ப தயாராக இருந்ததாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

`வரலாற்றில் எந்தவொரு நாடும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்ததில்லை. ஈரான் அதைச் செய்துள்ளது. நீங்கள் அதை ஒரு பதிலடியாகக் கருதலாம். ஆனால் இதேபோல சட்டவிரோத நடவடிக்கையில் அமெரிக்கா மீண்டும் ஈடுபட்டால், அதற்கும் அதேபோல பதிலடி கிடைக்கும்’ என்று ஈரானிய தூதர் கூறினார்.

அத்துடன், இஸ்ரேலின் எந்தவொரு பதில் நடவடிக்கைக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கத் தயாராக இருப்பதாக எலாஹி தெரிவித்துள்ளார்.

`(இஸ்ரேல் பிரதமர்) நெதன்யாகு நம்பகமானவர் அல்ல. ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை அவர் தொடங்கினார். மேலும் குடியிருப்புப் பகுதிகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றையும் அவர் குறிவைத்தார். சர்வதேச அல்லது மனிதாபிமான சட்டங்களை அவர் மதிக்கவில்லை. இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’ என்றார்.

மேலும், `ஈரானிடம் எந்த அணு ஆயுதங்களும் இல்லை. ஈரான் யுரேனியத்தை செறிவூட்டியுள்ளது என்று சாக்கு சொல்லி இஸ்ரேலின் சட்டவிரோத ஆட்சி ஈரானை தாக்கியுள்ளது. இது அபத்தமானது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை இஸ்ரேல் பாதிக்கிறது’ என்றும் அவர் கூறினார்.

மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, நேற்று (ஜூன் 23) கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு, பெரியளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.