இஸ்ரேல், ஈரான் இரண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக இஸ்ரேல் மீதான அதிருப்தி அவரது பேச்சில் வெளிப்பட்டது.
ஈரான் மீது குண்டுகள் வீசுவதை நிறுத்திவிட்டு, அந்நாட்டு விமானிகளை உடனடியாக திருப்பி அழைக்குமாறு இஸ்ரேலிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ உச்ச மாநாட்டிற்கு கிளம்புவதற்கு முன்பு, வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து டிரம்ப் பேசியதாவது,
`ஈரான் போர் நிறுத்தத்தை மீறிவிட்டது, இஸ்ரேலும் மீறிவிட்டது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் இறுதி செய்த பின்னரும், இஸ்ரேல் வெளியே வந்து ஏராளமான குண்டுகளை வீசியுள்ளது. இதற்கு முன்பு நான் பார்த்திராத வகையில் மிகப்பெரிய அளவிலான குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் செயலால் நான் மகிழ்ச்சியடையவில்லை.
ஈரான் செயலாலும் நான் மகிழ்ச்சியடையவில்லை. இரண்டு நாடுகளும் நீண்ட காலமாக, மிகக் கடினமாக முறையில் சண்டையிட்டு வருகின்றன. ஆனால் அவை தாம் என்ன செய்கின்றன எனத் தெரியாமலேயே இதை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன’ என்றார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள டிரம்ப், `ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் (இஸ்ரேல்) போர் விமானிகளை உடனடியாக நாடு திரும்பச் சொல்லுங்கள்’ என்றார்.
அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக குற்றம்சாட்டியுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தீவிரமான தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக அல் ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலுக்கும் தீர்க்கமாக பதிலளிக்க அதன் படைகள் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, அதிபர் டிரம்ப் நேற்று (ஜூன் 23) அறிவித்தபடி, இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. எனினும், ஒப்புக்கொண்டதை மீறி பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டதற்காகவே தற்போது டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.