உலகம்

காஸாவில் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்திய இஸ்ரேல்: ஆக்கிரமிக்கத் திட்டமா?

பொதுமக்களை நிரந்தரமாக வெளியேற்றி, அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கடலோர ரிசார்ட்டை உருவாக்கவேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

ராம் அப்பண்ணசாமி

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய அளவிலான பகுதிகள் இஸ்ரேலின் பாதுகாப்பு மண்டலங்களுடன் இணைக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காட்ஸ் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஹமாஸை ஒழித்துக்கட்டும் பணியில் காஸா மக்கள் ஈடுபடவேண்டும் என்றும், ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேலிய பிணையக் கைதிகளைத் திருப்பி அனுப்புவதே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், காஸாவில் இருந்து எவ்வளவு நிலத்தைக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

2023 அக்டோபரில் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது காஸாவில் அதிகளவிலான இடத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து பாலஸ்தீனர்கள் தாமாக முன்வந்து வெளியேறுவதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேலிய தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

முன்னதாக, காஸா பகுதியில் இருந்து பொதுமக்களை நிரந்தரமாக வெளியேற்றி, அங்கே அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கடலோர ரிசார்ட்டை உருவாக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

காஸாவில் தொடர்ந்து இரு மாதங்கள் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு இரு தரப்பிலிருந்தும் பிணையக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் ஹமாஸுடனான போரை மீண்டும் இஸ்ரேல் தொடர்ந்தது. காஸா பகுதியில் வான் வழித்தாக்குதலுடன், தரை வழித்தாக்குதலிலும் தற்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது.