காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 38 வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாள்களாகவே காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களை மீறியும் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு இதைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகிறது.
சனிக்கிழமை காலை மத்திய மற்றும் வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் முகாமிலிருந்த வீடு ஒன்றில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அல்-அவ்தா மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனைக்கு தான் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
துஃபாவில் ஒரு வீட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். இவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அல்-அஹலி மருத்துவமனைக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
ஷிஃபா மருத்துவமனை அளித்த தகவலின்படி, ஷதி முகாமில் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், தெற்கு மற்றும் மத்திய காஸாவில் உதவி கோரியவர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஐ.நா. பொதுச்சபையில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை உரையாற்றினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. காஸாவில் ஹமாஸுக்கு எதிரானப் பணியை முடித்தாக வேண்டும் என அவர் உரையாற்றினார். பெஞ்சமின் நேதன்யாகுவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு பிரதிநிதிகள் அவையிலிருந்து வெளியேறினார்கள்.
போரை நிறுத்த இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் அழுத்தம் அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கப்பதாக நாடுகள் முன்வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் தான் காஸா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
Gaza | Israel | Benjamin Netanyahu | Palestine |