அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் முன்மொழியப்பட்ட ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
போர் நிறுத்த அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டது. ஈரானிய அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை எட்டிவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதுகாப்பு முயற்சிகளில் ஆதரவளித்ததற்காகவும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதில் பங்கேற்றதற்காகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
அதேநேரம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால், ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கையும் அந்த அறிகையில் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 12 நாள்கள் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
ஆரம்பத்தில் டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரான் ஏற்கவில்லை. எனினும் சில மணிநேரங்கள் கழித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒப்புதல் அறிவிப்பு வெளியானதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.