உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை முந்துகிறாரா கமலா ஹாரிஸ்?

மிஷிகன், அரிஸோனா, விஸ்கான்சின், நெவாடா மாகாணங்களில் டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவு உள்ளது

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலுக்கான போட்டியில் முன்னாள் அதிபர் டிரம்புக்குக் கடுமையாகச் சவால் அளித்து வருவதாக அந்நாட்டில் வெளியான சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியதை அடுத்து, ஜனநாயக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ். இந்நிலையில் கடந்த ஜூலை 30-ல் வெளியான கருத்துக்கணிப்புகளின்படி டிரம்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையே கடுமையான போட்டி நடப்பது தெரியவந்துள்ளது.

நான்கு முக்கிய மாகாணங்களில் டிரம்பை விட ஹாரிஸுக்கு அதிக ஆதரவு உள்ளதாகவும், பிற இரண்டு மாகாணங்களில் டிரம்புக்கு அதிக ஆதரவு உள்ளதாகவும், ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மிஷிகன், அரிஸோனா, விஸ்கான்சின், நெவாடா மாகாணங்களில் டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவு உள்ளது. அதேநேரம், பென்சில்வேனியாவிலும், வடக்கு காரோலீனாவிலும் கமலா ஹாரிஸைவிட டொனால்ட் டிரம்புக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. ஜார்ஜியா மாகாணத்தில் இருவரும் சமமான ஆதரவைப் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் ராய்டர்ஸ் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில் டிரம்பை முந்தியுள்ளார் கமலா ஹாரிஸ்.