உலகம்

ஈரான் அதிபராகிறார் மசூத் பெஸெஷ்கியான்

ராம் அப்பண்ணசாமி

ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெஸெஷ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த மே 19-ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் அன்றைய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்ஸி. அதனைத் தொடர்ந்து புதிய அதிபரைத் தேர்தெடுக்க நடந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்நாட்டின் தீவிர வலதுசாரி பிண்ணனியைச் சேர்ந்த சயீத் ஜலிலியும், சீர்திருத்தவாத ஆதரவாளரான மசூத் பெஸெஷ்கியானும் போட்டியிட்டனர்.

ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டன. தேர்தலில் பதிவான 3.5 கோடி வாக்குகளில், பெசஷ்கியானுக்கு 1.6 கோடி வாக்குகளும், ஜலிலிக்கு 1.3 கோடி வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து மசூத் பெஸெஷ்கியான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தொழில்முறை இதய அறுவைச் சிகிச்சை நிபுணரான பெஸெஷ்கியான், முஹமது கட்டாமி ஈரான் அதிபராக இருந்தபோது, 2001 முதல் 2005 வரை அந்நாட்டு மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிள்ளார். மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் 1980-1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போரில் பங்கேற்று சண்டையிட்டுள்ளார் பெஸெஷ்கியான்.

பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போரட்டங்கள், சர்வதேச புறக்கணிப்பு, இஸ்ரேலுடன் நேரடி மோதல் என்று பலவித பிரச்சனைகள் ஈரான் சந்தித்து வரும் நேரத்தில் சீர்திருத்தவாத ஆதரவாளர் மசூத் பெசஷ்கியான் ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.