REUTERS
உலகம்

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் எப்ரஹிம் ரெய்ஸி மரணம்

கிழக்கு நியூஸ்

ஈரான் அதிபர் எப்ரஹிம் ரெய்ஸி, வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் அப்தோல்லாஹியன் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளார்கள்.

ஈரான் நாட்டு அரசு செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மறைவைத் தொடர்ந்து, அந்த நாட்டு அமைச்சரவை அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் - அஜர்பைஜான் எல்லைப் பகுதிக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தப்ரிஸ் நகருக்குத் திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்தவர்களைத் தேடும் பணி நேற்று முதல் நடைபெற்று வந்தது. எனினும், மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பாகங்களைப் பார்க்கும்போது, இதில் பயணித்தவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று தான் செய்திகள் வந்துகொண்டிருந்தன.

இந்த ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்பட மொத்தம் 9 பேர் பயணித்துள்ளார்கள். கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மாதி, தப்ரிஸ் இமாம் முஹமது அலி அலிஹாஷெம், விமானிகள் இருவர், தலைமைப் பாதுகாவலர் உள்பட இரு பாதுகாவலர்கள் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளார்கள்.