ANI
உலகம்

இஸ்ரேலை நேரடியாகத் தாக்க ஈரான் உயர் தலைவர் காமனேய் உத்தரவு

ராம் அப்பண்ணசாமி

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா மரணத்துக்குப் பதிலடியாக, இஸ்ரேலை நேரடியாகத் தாக்க ஈரான் நாட்டின் உயர் தலைவர் அயதொல்லாஹ் அலி காமனேய் உத்தரவிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 31-ல் இஸ்மாயில் ஹனியாவின் மரணத்தை அறிவித்த பிறகு நடந்த ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் காமனேய் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்மாயில் ஹனியாவின் மரணத்துக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரானும், ஹமாஸ் அமைப்பும் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால் ஹனியாவின் மரணத்துக்கு இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த அக்டோபர் 2023-ல் இருந்து போர் நடந்து வருகிறது.

காஸா பகுதியில் இத்தனை மாதங்களாகப் போர் நடந்து வரும் வேளையில் இஸ்ரேலை எதிர்த்து இதுவரை நேரடியாக ஈரான் களமிறங்கவில்லை. ஆனால் இஸ்ரேலை எதிர்க்க ஹமாஸுக்கும், ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும் உதவிகளை அளித்து வருகிறது ஈரான்.

ஹனியாவின் மரணத்தை முன்வைத்து காமனேய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், `அவர் சிந்திய இரத்தத்துக்கு பழி வாங்குவது எங்கள் கடமை. கடுமையான தண்டனை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துக்கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஈரான் உயர் தலைவர் காமனேயைச் சந்தித்துத் திரும்பிய பிறகு (ஈரான் நேரப்படி) கடந்த ஜூலை 31 அதிகாலை 2 மணி அளவில் தெஹ்ரானில் வைத்துக் கொல்லப்பட்டார் இஸ்மாயில் ஹனியா. தங்கள் மண்ணில் வைத்து இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது ஈரானியத் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.