கடந்த மாதம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் ஈரானிய வான் பகுதிக்குள் நுழைந்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியபோது, அவற்றை ஈரானின் விமானப்படையால் தடுக்க முடியவில்லை. மேலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், ஈரானிய போர் விமானங்களை அப்போது வானில் காண முடியவில்லை.
இந்நிலையில், இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் முடிவுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, பி.எல். 15 ஏவுகணைகளுக்கு இணக்கமான மலிவான சீன `செங்டு ஜே-10சி’ ரக போர் விமானங்களை வாங்கும் முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழைய விமானங்களுடன் கூடிய விமானப்படையை புதுப்பிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டாலும், போர் விமானங்களை வாங்க ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததை அடுத்தே, இத்தகைய முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இரட்டை எஞ்சின்களைக்கொண்டிருக்கும் ரஷ்ய தயாரிப்பான சுக்கோய் 35 ரக போர் விமானத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஈரான், தற்போது சீன தயாரிப்பான ஒற்றை எஞ்சின் கொண்ட ஜே-10சி விமானத்தைத் தேர்வுசெய்துள்ளது.
இதன் மூலம், போர் விமானம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 40-60 மில்லியன் டாலர்கள் வரை ஈரானுக்கு செலவுகள் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவின் `இரும்பு சகோதரன்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தான், கடந்த மே மாதத்தில் இந்தியாவுடன் நடந்த மோதலின்போது இதே ஜே-10சி ரக போர் விமானங்களைப் பயன்படுத்தியது.
கடந்த 2015-ல், 150 போர் விமானங்களை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை ஈரானும், சீனாவும் தொடங்கின.
ஆனால் போர் விமானங்களுக்கான தொகையை வெளிநாட்டு பணத்தில் செலுத்த சீனா கோரியதால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அப்போது, போர் விமானங்களுக்கு பதிலாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை மட்டுமே வழங்க முடியும் என்று சீனாவிடம் ஈரான் கூறியது.
இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் 50 எண்ணிக்கையிலான சுக்கோய் 35 ரக போர் விமானங்களை வாங்க ரஷ்யாவுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் இதுவரை நான்கு போர் விமானங்கள் மட்டுமே ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளன.