அமெரிக்கா - ஈரான் இடையிலான போரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முயன்றதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய ராணுவ தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. இதற்கிடையில், நேற்று (மார்ச் 29) இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தார் தலைமையில் சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஹார்முஸ் நீரிணை வழியான கடல் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட போரின் தாக்கங்கள் விவாதிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தையில் முழு ஆதரவு
பாகிஸ்தான் அமைச்சர் இஷாக் தார், அமெரிக்கா-ஈரான் பேச்சுகள் இஸ்லாமாபாத்தில் நடத்தப்படுவதற்கு பங்கேற்ற நாடுகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியான், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோருடன் தொலைபேசி உரையாடல்கள் நடத்தியதாகவும் கூறினார். அமெரிக்க நிர்வாகத்துடனும் பாகிஸ்தான் தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.
ஈரான் மறுப்பு
இந்நிலையில் பாகிஸ்தானின் கருத்தை மறுத்து மும்பையில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“அமெரிக்காவுடன் நேரடி பேச்சுகள் எதுவும் நடைபெறவில்லை. இடைத்தரகர்கள் மூலம் அதிகப்படியான மற்றும் நியாயமற்ற கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நடத்திய நிகழ்ச்சிகள், அவர்களின் சொந்த விவகாரம். அதில் ஈரான் பங்கேற்கவில்லை. போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அழைப்புகளை வரவேற்கிறோம், ஆனால் யார் போரைத் தொடங்கினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரான் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவுடன் பேச்சுகள் நடத்தியதாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்ச திட்டத்திற்கான பதிலை இஸ்லாமாபாத் வழியாக அனுப்பியதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
After Pakistan claimed it was ready to host direct talks between the United States and Iran to end their ongoing war, Iran has issued a clear denial of any involvement in such Pakistani-led efforts.