ஹார்முஸ் நீரிணையைக் கண்காணித்து வந்த ஈரானின் கடற்படை தளபதி அலிரெஸா டங்க்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அமெரிக்கா & இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கி, 27 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி, ராணுவ தலைவர் அலி லரிஜானி, புரட்சிகர பாதுகாப்புப் படையின் உள்நாட்டு துணை ராணுவப் பிரிவான பசிஜின் தளபதி குலாம்ரெஸா சுலைமானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்து வரும் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளையும் இஸ்ரேலையும் தாக்கி வருகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்தையும் ஈரான் முடக்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடலால் பாதிப்பு
மறுபுறம், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான கடல்வழிப் பாதையாக உள்ளது ஹார்முஸ் நீரிணை. இதன் பகுதியை ஈரான் தனது எல்லையாகக் கொண்டுள்ளது. தற்போது போர் காரணமாக உலக நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தும் வகையில், ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றி, அது மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஏற்றுமதி 95% குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 120-க்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்லும் இந்தப் பாதையில், கடந்த மார்ச் 1 முதல் 25 வரை மொத்தமே 155 கப்பல்கள்தான் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி
அவற்றில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் என்றும், மேற்கு நாடுகளுக்கு இரு கப்பல்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், போர் காரணமாக ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் வரி வசூலிக்க முடிவெடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையில் இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை நட்பு நாடுகள் என்று அறிவித்த ஈரான், இந்நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் நீரிணையை எந்தவித நிபந்தனையும் இன்றி கடந்து செல்லலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
கடற்படை தளபதி கொலை?
ஹார்முஸ் நீரிணை மீது ஈரானின் ஆதிக்கம் உலக நாடுகளைப் பாதித்து வரும் நிலையில், அதனைக் கண்காணித்து வந்த ஈரானின் புரட்சிகர காவல்படையின் கடற்படை தளபதி அலிரெஸா டங்க்சிரியை இஸ்ரேல் - அமெரிக்க ராணுவம் கொன்றுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் பந்தர் அப்பஸ் கடற்பகுதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது. 2018-ல் இருந்து ஈரானின் கடற்படை தளபதியாகச் செயல்பட்டவர் அலிரெஸா டங்க்சிரி. அவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
Islamic Revolutionary Guard Corps (IRGC) naval commander Alireza Tangsiri has been killed in a US-Israeli strike in the coastal area of Bandar Abbas, Israeli media reported, citing an Israeli official. Tangsiri was responsible for the closure of the Strait of Hormuz, according to a Times of Israel report.